கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இந்த ஆண்டு மகா சிவராத்திரியில் பக்தர்கள் இலவசமாக கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று மகா சிவராத்திரி. மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண்விழித்து சிவபெருமானை வழிபடுவர். அவ்வாறு இரவு முழுவதும் கண்விழித்து சிவபெருமானை வழிபட்டால் கடவுளின் ஆசிகளை பெறலாம் என கூறப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டு மகா சிவராத்திரி வரும் பிப்ரவரி 18ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஒவ்வொரு வருடமும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டும் மகா சிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 18ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி சிலை முன்பு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
இந்த விழா சத்குரு ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் நடைபெறும். மேலும் இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற கலைஞர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் மகா சிவராத்திரி விழா நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இந்த ஆண்டு மகா சிவராத்திரியில் பக்தர்கள் இலவசமாக கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பக்தர்கள் https://isha.co/msr23-tn என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தாண்டு மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்கும் இசை கலைஞர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
அதன்படி, தமிழகத்தை சேர்ந்த பிரபல நாட்டுப் புற கலைஞர் வேல்முருகன், ராஜஸ்தானி நாட்டுப் புற கலைஞர் மாமேகான், இசையமைப்பாளரும், பிரபல சித்தார் இசை கலைஞருமான திரு. நிலத்ரி குமார், டோலிவுட் பின்னணி பாடகர் ராம் மிரியாலா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
மேலும், கேரளாவைச் சேர்ந்த ‘தெய்யம்’ நடன குழுவினர், கர்நாடகாவை சேர்ந்த ஜனபாடா நாட்டு புற நடன கலைஞர்கள், ஜார்ஜியாவைச் சேர்ந்த நடன கலைஞர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஈஷாவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலான Sadhguru Tamil-ல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். மேலும், அனைத்து செய்தி தொலைக்காட்சிகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.