ஈரோடு: ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் நேற்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது நிருபர்களிடம் கூறியதாவது: 5 ஆண்டு காலம் ஆட்சி செய்யவே மக்கள் வாக்களித்து திமுகவை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர். ஒன்றரை ஆண்டு காலத்தில் 85 சதவீதம் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எஞ்சிய வாக்குறுதிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நிறைவேற்றுவார்.
தோல்வி அச்சத்தால் அதிமுகவினர் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்து வருகின்றனர். வாக்காளர் பட்டியல் தயாரிப்பது தேர்தல் ஆணையம். தமிழக அரசு தயாரிக்கவில்லை. அதிமுகவினர் தங்களது இருப்பை காட்டி கொள்ள ஏதாவது புகார்களையும், அரசின் மீது அவதூறுகளையும் பரப்பி வருகின்றனர். தங்களை அடைத்து வைத்துள்ளதாக வாக்காளர் யாராவது தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளனரா? திமுக கூட்டணி தேர்தல் அலுவலகங்கள் அனைத்தும் அனுமதி பெற்றுதான் அமைக்கப்பட்டுள்ளது. கைத்தறி, விசைத்தறிக்கான இலவச மின்சார பயன்பாட்டு அளவை உயர்த்தியுள்ளதற்கான அரசாணையை வெளியிட தேர்தல் ஆணையத்திடம் அரசு சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், அதிமுக இந்த அரசாணையை வெளியிட அனுமதிக்ககூடாது என கடிதம் அளித்துள்ளது.
எனவே, இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டது. அரசின் சார்பில் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்று பதிலளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் இதை ஏற்று அனுமதி வழங்கினால் அரசாணை வெளியிடப்படும். இல்லையெனில், தேர்தல் நடவடிக்கைகள் முடிந்ததும் அரசாணை வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
*ஆதார் இணைக்க பிப்.28 வரை அவகாசம்
2.60 கோடி மின் நுகர்வோர் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைத்துள்ளனர். இன்னும் 7 லட்சம் மின் இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமல் உள்ளது. இந்த மின் நுகர்வோரை கவனத்தில் கொண்டு ஆதார் எண் இணைக்க வரும் 28ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதுவே, இறுதி கால நீட்டிப்பு, இனிமேல் கால நீட்டிப்பு அளிக்கப்படமாட்டாது என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.