கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், மெலட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்தவர் மோகனா (22). இவரின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவர, கிராமத்தில் தனியாக வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில்,மோகனாவுக்கும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சமித் (30) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நாளடைவில் அது திருமணம் மீறிய பழக்கமாக மாறியது.

இன்ஸ்டாகிராமில் பேசிய சமித், `நான் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகேயுள்ள நூற்பாலையில் மேலாளராகப் பணியாற்றி வருகிறேன்’ என அந்தப் பெண்ணிடம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து அந்தப் பெண், சமித்தைச் சந்திக்க விரும்பியிருக்கிறார். ஆனால், சமித் மறுத்துவந்த நிலையில், அந்தப் பெண் அவரைப் பார்க்கும் ஆர்வத்தில் யாருக்கும் தெரியாமல் கிளம்பிவந்து வேடசந்தூரில் தேடியிருக்கிறார்.
அவர் எங்கும் கிடைக்காத நிலையில், இன்ஸ்டாகிராம் மூலம் வேடசந்தூர் பகுதியிலுள்ள ஒரு பெண்ணின் உதவியை நாடியிருக்கிறார் இளம்பெண். அவர் அடைக்கலம் கொடுக்க, வேடசந்தூர் அண்ணா நகரில் தோழியுடன் தங்கியிருந்து நூர்பாலையில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். நூற்பாலைக்கு வேலைக்குச் சென்று கொண்டே காதலித்த சமித் பற்றி தன்னுடைய தோழியின் மூலம் விசாரித்திருக்கிறார். அப்போது சமித் ஏற்கெனவே திருமணமாகி மனைவி குழந்தைகளுடன் கேரளாவில் வசித்து வருவதும், நூற்பாலை மேலாளர் இல்லை என்பதும், கொத்தனார் வேலை செய்து வருவதும் தெரியவந்திருக்கிறது. இதனால் மனம் வெறுத்த இளம்பெண், தனது ஊருக்குச் செல்ல முடியாமல் வேதனையுடன் மூன்று மாதங்களாக வேடசந்தூரிலேயே வசித்து வந்திருக்கிறார்.

இளம்பெண் காணாமல்போனதை அறிந்த வெளிநாட்டில் வேலை செய்யும் அவரின் கணவர், அங்கிருந்தவாறே கேரள போலீஸாருக்குப் புகார் அளித்தார். அதனடிப்படையில் கேரள போலீஸார் விசாரணையில் நடத்தியதில் இளம்பெண் வேடசந்தூரில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வேடசந்தூர் வந்த கேரள போலீஸார், வேடசந்தூர் டி.எஸ்.பி துர்காதேவி உதவியை நாடினர். அவருடைய ஏற்பாட்டில் தனிப்படை போலீஸார் மற்றும் கேரள போலீஸார் இணைந்து இளம்பெண்ணைக் கண்டுபிடித்தனர். அதையடுத்து அவர் கேரளாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.