ஊழல், மோசடி வழக்கில் பாஜக எம்எல்ஏ-க்கள் இருவருக்குச் சிறை, அபராதம்! – கர்நாடக அரசியலில் பரபரப்பு!

கர்நாடக மாநிலத்தில் இன்னும் இரண்டு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், ‘பா.ஜ.க அனைத்திலும் 40 சதவிகிதம் ஊழல் செய்கிறது’ என்ற ஒற்றை குற்றச்சாட்டைக் கூறி, காங்கிரஸ், ஜனதா தளம் கட்சியினர், ’40 சதவிகிதம்’ என்பதை பா.ஜ.க-வை வீழ்த்துவதற்கான ஆயுதமாகப் பயன்படுத்திவருகின்றனர். இப்படியான நிலையில், இரு வேறு வழக்குகளில் ஊழல், மோசடி செய்ததாக, பா.ஜ.க-வின் இரண்டு எம்.எல்.ஏ-க்களைக் குற்றவாளிகளாக அறிவித்து, கர்நாடக சிறப்பு, மாவட்ட நீதிமன்றங்கள் தீர்ப்பளித்திருப்பதால், அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இது குறித்துப் பார்ப்போம்…

டெண்டர் ஊழல்கள், இரண்டு ஆண்டுகள் சிறை!

கர்நாடக மாநிலத்தின் பா.ஜ.க முன்னாள் அமைச்சரும், ஹாவேரி தொகுதி எம்.எல்.ஏ-வுமான நேரு ஓலேகர், “தன் பதவியைப் பயன்படுத்தி, அவர் மகன்களுக்கு முறைகேடாக டெண்டர்கள் வாங்கித் தந்ததுடன், அந்த டெண்டர்களுக்குத் தனது தொகுதி நிதியைப் பயன்படுத்தியிருக்கிறார். இவர்கள் வேறு யாரையும் டெண்டர் எடுக்கவிடாமல் மிரட்டியிருக்கின்றனர்’’ என அவர்மீது, ஊழல் தடுப்புச் சட்டங்களின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, குற்றம்சாட்டப்பட்டது.

பா.ஜ.க எம்.எல்.ஏ நேரு ஓலேகர்

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பி.ஜெயந்தகுமார், “எம்.எல்.ஏ நேரு ஓலேகரின் மகன் மஞ்சுநாத் ஓலேகர், போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி, அவரின் அப்பாவின் தலையீட்டுடன், 1.5, 2.15 கோடி ரூபாய்க்கான டெண்டர்களை எடுத்திருப்பதை அரசு தரப்பு நிரூபித்திருக்கிறது. அதேபோல், தேவராஜ் ஓலேகர் போலியான ஆவணங்களைக் கொடுத்து, ரூ.20 லட்சத்துக்கு ரோடு வேலை செய்ததாகக் கூறியிருக்கிறார். ஆனால், அவர் அந்தப் பணியை மேற்கொள்ளவில்லை. 2009, ஜூலை 29-ல், 1.5 கோடி ரூபாய்க்கான பணி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகக் கொடுத்த போலி ஆவணங்களை மற்ற குற்றவாளிகள் (அரசு அதிகாரிகள்) உண்மை எனக் கூறி சான்றளித்திருக்கின்றனர்’’ எனக் கூறி தண்டனைவிதித்து உத்தரவிட்டார்.

கர்நாடகா நீதிமன்றம்

மேலும், “ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் எம்.எல்.ஏ ஓலேகர் ரூ.2,000, அவர் மகன்கள் மஞ்சுநாத் ஓலேகர், தேவராஜ் ஓலேகர் தலா,ரூ. 6,000 மற்றும் இதர குற்றவாளிகளான அரசு அதிகாரிகள் ஐந்து பேருக்கும் தலா, ரூ.2,000 அபராதம் மற்றும் அனைவருக்கும், இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது’’ என உத்தரவிடப்பட்டிருக்கிறது.

காசோலை மோசடி, ரூ.1.38 கோடி அபராதம்!

முடிகிரி தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ-வாக இருப்பவர் எம்.பி.குமாரசாமி. இவர்மீது, சிக்கமங்களூரைச் சேர்ந்த விவசாயி ஹூவப்ப கெளவுடா என்பவர், 2021-ல் செக் மோசடி செய்ததாக வழக்கு தொடுத்திருந்தார். இதில், ‘‘என்னிடமிருந்து ரூ.1.66 கோடியைப் பெற்ற எம்.எல்.ஏ எம்.பி.குமாரசாமி, 2018 தேர்தலுக்கு முன்பு, 1.4 கோடி ரூபாயைத் திருப்பிக் கொடுத்தார். மீதமுள்ள ரூ.26.7 லட்சத்தை விரைவில் கொடுப்பதாகக் கூறி, திருப்பித் தரவில்லை. எம்.எல்.ஏ மீண்டும் 2 சதவிகிதம் வட்டிக்கு 68 லட்சம் ரூபாய் பணம் கேட்கிறார். அவர் கொடுத்த காசோலைகள் Dishonour ஆகியிருக்கின்றன’’ எனப் புகாரில் கூறியிருக்கிறார்.

பா.ஜ.க எம்.எல்.ஏ, குமாரசாமி

நேற்று முன்தினம், கர்நாடக மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி ஜே.பிரீத், ‘‘எம்.எல்.ஏ குமாரசாமி கொடுத்த எட்டு காசோலைகள் Dishonour ஆகியிருக்கின்றன. ஹூவப்ப கெளவுடா, Negotiable Instrument Act–ன் கீழ் எட்டு தனி வழக்குகள் பதிவுசெய்திருக்கிறார். குமாரசாமி புகார்தாரரான ஹூவப்ப கெளவுடாவுக்கு, 1.38 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும். இல்லையெனில், ஒவ்வொரு வழக்குக்கும் ஆறு மாதங்கள் என, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டார். இரு வழக்குகளிலும் எம்.எல்.ஏ-க்கள், பெயிலில் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.

தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த இரு வழக்கின் தீர்ப்புகளும் அடுத்தடுத்து வெளியாகி, தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. தேர்தல் வாக்குச் சேகரிப்பில் களமிறங்கியிருக்கும் காங்கிரஸ், ஜனதா தளம் கட்சியினர் இந்த வழக்குகளின் தீர்ப்புகளை மையப்படுத்தி, ’40 சதவிகிதம் ஊழல் ஆட்சி’ எனக் கூறி, பா.ஜ.க-வைக் கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.