என்னுடைய வாழ்க்கை இப்போது வேறுமாதிரி செல்கிறது – லவ் டுடே ஹீரோயின் நெகிழ்ச்சி!

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து மாபெரும் வெற்றிபெற்ற ‘லவ் டுடே’ படத்தின் 100-வது நாள் வெற்றி விழா நேற்று சேத்துப்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதீப் ரங்கநாதன், இவானா, இசையமைப்பாளர் யுவன் உள்பட படக்குழு அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். சிறப்பு விருந்தினரான நகைச்சுவை நடிகர் சதீஷ், ஜி.பி.முத்து ஆகியோர் பங்கேற்றனர். 

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இயக்குநர் மோகன் ராஜா மேடையில் பேசுகையில், “AGS உருவான 17 வருடத்தில் 16 வருடத்துக்கு மேல் அந்நிறுவனத்தோடு இருப்பதில் மகிழ்ச்சி. தனிஒருவன் படத்தின் மூலம் நன்றிக்கடன் பட்டுள்ளேன். கோமாளி, லவ் டுடே படங்களை கொடுத்த பிரதீப்புக்கு நன்றி. இன்றைய இளைஞர்களுக்கு பிரதீப் inspiring ஆக உள்ளார்” என்றார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஐசரி கணேஷ் மேடையில் பேசுகையில், “இவ்விழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சி. பிரதீப் ரங்கநாதனின் 2 படங்களும் 100 நாட்கள் ஓடச்செய்து சாதனை படைத்துவிட்டார். அவருடைய அடுத்த படமும் 100 நாட்கள் ஓட வேண்டும். மனமார்ந்த வாழ்த்துகள் இன்னும் மேன்மேல் செல்ல வேண்டும்” என்றார்.
image
நடிகை இவானா மேடையில் பேசுகையில், “படக்குழுவுக்கு நன்றி… என்னுடைய வாழ்க்கை இப்போது வேறுமாதிரி செல்கிறது. லவ் டுடே ரிலீஸ் அப்புறம் முதல் நாளில் அர்ச்சனா மேடம், ஐஸ்வர்யா மேடம் இருவரின் அரவணைப்பும் மிக பிடித்திருந்தது. பிரதீப் ரங்கநாதனை இயக்குநராகவும் நடிகராகவும் நண்பராகவும் பிடிக்கும். பிரதீப் ரங்கநாதன் என்றாலே சிறப்புதான். சத்யராஜ் சாருடன் நடிப்பதில் சிறு தயக்கம் இருந்தது. ஆனால் நிறைய கற்றுக்கொடுத்தார்” என்றார்.
AGS அர்ச்சனா கல்பாத்தி மேடையில் பேசுகையில், “பிகில் இசை வெளியீட்டு விழாவில் கடைசியாக பேசியது… எனது வாழ்க்கையில் கீழே சென்றபோது ஒரு வெற்றி கொடுத்த படம் லவ் டுடே. பிரதீப் கதை கூறியபின் பெரிய ஓபனிங் கிடைக்கும் என நம்பினோம். ஒவ்வொரு படத்தை தயாரிக்கும் போதும் ஹிட் கொடுக்க வேண்டும் என நினைப்போம். அதில் இந்த படம்‌ முதலிடத்தில் இருக்கும்போது மிக்க மகிழ்ச்சி. படக்குழுவுக்கு நன்றி. பிரதீப்புடைய கால்ஷீட் எங்களிடம்தான் உள்ளது. மீண்டும் சந்திப்போம்” என்றார்.

image

இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் மேடையில் பேசுகையில், “அனைவருக்கும் நன்றி தெரிவிக்கதான் இந்த நிகழ்ச்சி. ஒரு புதுமுகத்தை அறிமுகப்படுத்துவது எளிதல்ல. அதை செய்ததை நான் எப்போதும் மறக்கமாட்டேன். ரூ.100 கோடியை உலகம் முழுவதும் இந்த படம் தாண்டியுள்ளது. மலை ஏறுவதற்கு என்ன வேண்டும் என்பதை தாண்டி முதலில் மலை வேண்டும். அந்த மலை தான் லவ் டுடே. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வாழ்வில் ரொம்ப கஷ்டப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் பெரிய மலை ஏறி கொண்டிருக்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நன்றி” என்றார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.