நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சுமார் 35 ஆயிரத்திற்கு மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள், நேரடியாகவும், மறைமுகமாகவும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஏழு ஆண்டுகளாக விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கப்படவில்லை. மூன்றாண்டுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு ஒப்பந்தமும் அமல்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் விசைத்தறி தொழிலாளர்கள் 75% கூலி உயர்வு கோரி 15வது நாளாக இன்று வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உடனடியாக விசைத்தறி உரிமையாளர்கள் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் என நான்கு முறை நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. உடனடியாக தமிழக அரசும், மாவட்ட நிர்வாகம் விசைத்தறி தொழிலாளர்களின் கூலி பிரச்சனையில் தலையிட்டு சுமுக தீர்வு காண வலியுறுத்தி, இன்று சிபிஎம் கட்சி சார்பில் ஆனங்கூர் பிரிவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் தமிழக அரசும், வருவாய் துறையினரும், விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தி காலை 11 மணியளவில் கஞ்சி தொட்டி திறப்பதாக அறிவித்துள்ளனர்.