சென்னை: தமிழக மின்வாரியத்துக்கு 4,320 மெகாவாட் திறனில் 5 அனல்மின் நிலையங்கள், 2,321 மெகாவாட் திறனில் 47 நீர்மின் நிலையங்கள், 516 மெகாவாட் திறனில் 4 எரிவாயு மின்நிலையங்கள் உள்ளன.
இவற்றில் கிடைக்கும் மின்சாரம் தினசரி மின்தேவையைப் பூர்த்தி செய்ய போதவில்லை. இதனால், மத்திய அரசு, தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் வாங்கப்படுகிறது.
அனல்மின் நிலையங்களில் பழுது, பாய்லர் டியூப் பஞ்சர் காரணமாக நீர்மின் நிலையங்களில் தண்ணீர் தட்டுப்பாடு, எரிவாயு மின்நிலையங்களில் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு காரணமாக சில சமயங்களில் மின்னுற்பத்தி பாதிக்கப்படுகிறது. அடுத்த மாதம் முதல் கோடை காலம் தொடங்க உள்ளது.
வரும் கோடையில் தினசரி மின்தேவை 16 ஆயிரம் மெகாவாட் அளவை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, அதிகரிக்கும் மின்தேவையைப் பூர்த்தி செய்ய மின்வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக, மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி தலைமையில், தலைமைப் பொறியாளர்களுடன் அண்மையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், மின்னுற்பத்தி நிலையங்களில் முழு அளவில் மின்னுற்பத்தியை செய்ய பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.