செங்கல்பட்டு மாவட்டம், நாவலூருக்கு அருகிலுள்ள தாழம்பூர் பகுதியில் பல்வேறு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு வடமாநிலங்களைச் சேர்ந்த பலரும் தங்கி வேலைபார்த்து வருகிறார்கள். இந்தப் பகுதியில் நடக்கும் ஒரு தனியார் நிறுவன கட்டுமானப் பணியில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த காசேட்ரா மோகன் பர்மன் என்பவரும் வேலைபார்த்து வந்திருக்கிறார். இவர் கடந்த சனிக்கிழமை இரவு நேரத்தில் காரணை நேரு தெரு பகுதிக்கு உணவருந்தச் சென்றிருக்கிறார்.

உணவருந்திவிட்டு தான் தங்கியிருக்கும் இடத்துக்கு திரும்பிவர வழிதெரியாமல், அங்கும் இங்குமாக சுற்றிவந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த ஒரு வீட்டை தட்டியிருக்கிறார் மோகன். அதேசமயத்தில் அந்த தெருவிலிருந்த நாய்கள் குறைக்கும் சத்தம் கேட்டு அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், மோகனை திருடன் என்று நினைத்து அவரை விரட்டிப் பிடிக்க முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த இளைஞர்கள் மோகனை தாக்கப் பதிலுக்கு அவரும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
ஆத்திரமடைந்த இளைஞர்கள் அங்கிருந்த கட்டை, கம்பியைக் கொண்டு மோகனை சரமாரியாகத் தாக்கியிருக்கிறார்கள். படுகாயமடைந்த மோகன் இரவு முழுவதும் அங்கேயே இருந்திருக்கிறார். அடுத்தநாள் காலையில் சம்பவமறிந்து வந்த தாழம்பூர் பகுதி போலீஸார் படுகாயமடைந்திருந்த மோகனை மீட்டு சிகிச்சைக்காகக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்திருக்கிறார்கள். உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் மருத்துவர்கள் மோகனை மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்திருக்கிறார்கள்.

தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையிலும் மோகன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து இந்த வழக்கைக் கொலை வழக்காக மாற்றிய போலீஸார், விசாரணை மேற்கொண்டனர். மேலும், வடமாநிலத் தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய காரணை நேரு தெருவைச் சேர்ந்த ஆனந்த், ராஜா, உதயகுமார், விக்னேஷ், பாலமுருகன், ரமேஷ் ஆகிய ஆறு பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். வடமாநிலத் தொழிலாளி ஒருவர் அடித்தே கொலைசெய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.