டெல்லி, மும்பையில் பிபிசி அலுவலகங்களில் 2வது நாளாக சோதனை: கம்ப்யூட்டர்கள், செல்போன்களை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்

புதுடெல்லி: மோடியின் ஆவணப்படம் வெளியிட்ட விவகாரத்தில் டெல்லி, மும்பை பிபிசி அலுவலகத்தில் இரண்டாவது நாளாக நேற்றும் சோதனை நடந்தது. அலுவலகங்களில் இருந்த கம்ப்யூட்டர்கள், செல்போன்களை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். குஜராத்தில் 2002ம் ஆண்டு நடந்த மோதல் குறித்து இரண்டு பாகங்கள் கொண்ட ஆவணப்படத்தை லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிபிசி நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியிட்டது. பிரதமர் மோடியை குற்றம் சாட்டி வெளியான இந்த ஆவணப்படத்திற்கு ஒன்றிய அரசு தடை விதித்தது. இந்த ஆவணப்படம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு, அவை விசாரணையில் இருந்து  வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். சர்வதேச வரி விவகாரங்கள் தொடர்பாக சோதனைகள் நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக  விமர்சித்தன. இருப்பினும் நேற்று 2ம் நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் பிபிசி அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.

நேற்று காலை 11.30 மணி அளவில் பிபிசி அலுவலகத்திற்கு மேலும் சில வருமானவரித்துறை அதிகாரிகள் வந்தனர். பின்னர் தங்கள் சோதனையை அவர்கள் தொடர்ந்தனர். நிதித்துறை உள்ளிட்ட சில அலுவல் ரீதியில் பணிபுரியும் ஊழியர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சில தகவல்களை கேட்டு பெற்றனர். அதே சமயம் பத்திரிகையாளர்களை நேற்றுமுன்தினம் இரவில் இருந்து விடுப்பில் செல்ல அறிவுறுத்தினர். இந்த சோதனையின் போது பிபிசியில் உள்ள சில கம்ப்யூட்டர்கள், செல்போன்கள் வருமான வரித்துறை அதிகாரிகளால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டனர்.

* பிபிசியில் சோதனை அமெரிக்கா கைவிரிப்பு
இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள  பத்திரிகை, கருத்து சுதந்திரம், மத சுதந்திரத்தை ஆதரிப்பதாக கருத்து தெரிவித்து உள்ள அமெரிக்கா இந்த சோதனை பற்றி தீர்ப்பு வழங்கும் நிலையில் நாங்கள் இல்லை என்று தொிவித்து உள்ளது. பிபிசி சோதனை தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் பிரைஸ் கூறியதாவது: இந்திய வருமானவரித்துறை அதிகாரிகள் டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகங்களில் சோதனை நடத்தியதை நாங்கள் அறிவோம். இந்த சோதனையின் விவரங்கள் தொடர்பாக இந்திய அதிகாரிகள் தான் தெரிவிக்க வேண்டும். இந்த  நடவடிக்கைக்கு அப்பால், நான் இன்னும் விரிவாகக் கூறுவது பொதுவான விஷயம். இந்த சூழலில் நான் உங்களுக்கு கூறுவது என்னவென்றால் உலகம் முழுவதும் சுதந்திரமான பத்திரிகையின் முக்கியத்துவத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்.

கருத்துச் சுதந்திரம், மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலுப்படுத்துவதன் மூலம் உலகெங்கிலும் உள்ள ஜனநாயகத்தை பாதுகாக்கும் உரிமைகளாக நாங்கள் தொடர்ந்து முன்னிலைப்படுத்துகிறோம்.  இதுதான் நமதுநாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்தியுள்ளது.  இதுதான் இந்தியாவிலும் ஜனநாயகத்தை வலுப்படுத்தியுள்ளது. இந்த சுதந்திரம் தான் உலகெங்கிலும் உள்ள ஜனநாயகத்தின் அடித்தளம். அதேசமயம் பிபிசியில் நடந்த சோதனை  ஜனநாயக மதிப்புக்கு எதிராக நடந்ததா என்றால் என்னால் சொல்ல முடியவில்லை. இந்த சோதனைகளின் உண்மைகளை நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆனால் நான் ஒரு தீர்ப்பை வழங்கக்கூடிய நிலையில் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* பா.ஜ அரசின் பழிவாங்கும் நடவடிக்கை: மம்தா
பிபிசி சோதனை குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறையின் சோதனை மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இப்படியோ போனால் ஒரு நாள் நாட்டில் ஊடகங்களே இருக்காது. பாஜ தலைவர்களின் ஒரே விருப்பம் சர்வாதிகாரம். ஹிட்லரை விட அவர்கள் அதிக சர்வாதிகாரம் படைத்தவர்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* இந்தியாவின் மதிப்பை சீர்குலைத்து விட்டது காங்கிரஸ் குற்றச்சாட்டு
இந்தியாவில் ஜி20 மாநாட்டை நாடு நடத்தும் இந்த நேரத்தில் பிபிசியில் சோதனை நடத்துவதன் மூலம் இந்தியாவின் மதிப்பை மோடி சீர்குலைத்து விட்டார் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. இதுபற்றி காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா கூறுகையில், ‘பிரதமர் மோடியின் கடந்த காலம் குறித்து யாரேனும் கேள்வி கேட்டால் ரெய்டு நடத்தப்படுகிறது. இப்போது ஜனநாயகத்தின் நான்காவது தூணையும் அரசு தகர்த்து விட்டது.  ‘ஸ்டார்ட் அப் இந்தியா’வை உருவாக்குவோம் என்று  மோடி  வாக்குறுதி அளித்தார். ஆனால் அது ‘ஷட் அப் இந்தியா’ ஆகிவிட்டது. இந்த ஆண்டு ஜி 20 தலைமை பொறுப்பில் இந்தியா உள்ளது. இந்த ரெய்டு மூலம் இந்தியாவின் மதிப்பை அவர் சீர்குலைத்து விட்டார். இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்று முழங்கிய அவரே இப்போது பாசாங்குத்தனத்தின் தந்தை ஆகிவிட்டார்’ என்று விமர்சனம் செய்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.