திருமணம் தாண்டிய உறவு; தட்டிக்கேட்ட கணவனை, மதுவில் விஷம் கலந்து கொலைசெய்த மனைவி!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகேயுள்ள நடராஜபுரத்தைச் சேர்ந்தவர் சுகுமார். இவருக்குத் திருமணமாகி கவிதா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள். சுகுமார் செங்கல்பட்டில் செயல்பட்டுவரும் ஒரு கோழி இறைச்சிக் கடையில் வேலைபார்த்து வந்தார். அதேபோல, கவிதாவும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்தார்.

சுகுமார்

இந்த நிலையில், கவிதா வேலை செய்யும் இடத்தில் உடன் பணியாற்றும் ஒருவருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டு, அது திருமணம் தாண்டிய உறவாக மாறியிருக்கிறது. இதனை அறிந்துகொண்ட சுகுமார், கவிதாவைக் கண்டித்திருக்கிறார். அதனால், தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்திருக்கிறது.

இந்தச் சூழலில்தான், கடந்த திங்கள்கிழமை சுகுமாரும், அவருடன் பணியாற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஹரிலால் என்பவரும் ஒன்றாக மது அருந்தியிருக்கின்றனர். மது அருந்தியவுடன் உடல்நலக்குறைபாடு ஏற்பட்டு ஹரிலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதேபோல, சிறிது நேரத்தில் சுகுமாருக்கும் உடல்நலக்குறைபாடு ஏற்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

ஹரிலால்

தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் இருவரும் அருந்திய மதுவில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது. விஷம் கலந்த தகவல் காவல்துறையினருக்குத் தெரிவிக்கப்பட்டது. சம்பவமறிந்து வந்த போலீஸார், சுகுமாரின் மனைவியிடம் விசாரணை மேற்கொண்டனர். முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய கவிதாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், மதுவில் தான் விஷம் கலந்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இதனையடுத்து கவிதாவைக் கைதுசெய்த போலீஸார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், “என்னுடன் பணிபுரிபவருடன் ஏற்பட்ட பழக்கம் தெரிந்ததும், என்னுடைய கணவர் சுகுமார் அடிக்கடி தகராறு செய்துவந்தார். இதனால், அவருக்கு மதுவில் விஷம் கலந்துகொடுத்து, அவரைக் கொலைசெய்ய முடிவுசெய்தேன். இதற்காக கடந்த ஞாயிறு அன்று என்னுடைய உறவினர் மூலம் கணவருக்கு என்று சொல்லி மது பாட்டில் வாங்கிவரச் சொன்னேன். அந்த மது பாட்டிலில் விஷத்தைக் கலந்தேன். அன்று வீட்டுக்கு வந்த கணவரிடம் யாரோ கொடுத்துச் சென்றார்கள் என்று சொல்லி விஷம் கலந்த மது பாட்டிலைக் கொடுத்தேன்.

கவிதா

அன்று ஏற்கெனவே மது அருந்திவந்ததால் மதுவைக் குடிக்காமல் அப்படியே வைத்துவிட்டார் என் கணவர் சுகுமார். பின்னர் அடுத்தநாள் வேலைக்குச் செல்லும்போது, அந்த பாட்டிலை தன்னுடன் எடுத்துச் சென்று மதிய வேளையில் அருந்தியிருக்கிறார். அப்போது, அவருடன் பணியாற்றும் ஹரிலாலும் அந்த மதுவைக் குடித்திருக்கிறார். அதனால், அவரும் இறந்துவிட்டார்” என்று தெரிவித்திருக்கிறார் கவிதா.

போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.