மதுரை: திருவையாறு புறவழிச்சாலை திட்டத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தஞ்சாவூர் திருவையாற்றைச் சேர்ந்த செந்தில்நாதன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. மணக்கரம்பை, அரசூர், காட்டுக்கோட்டை, கண்டியூர், கீழதிருப்பூந்துருத்தி, கல்யாணபுரம், பெரும்புலியூர், திருவையாறு ஆகிய வழியாக 6.74 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.191.34 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது.
விவசாய நிலங்கள் வழியாக புறவழிச்சாலை அமைக்கப்படுவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அரசூர், காட்டுக்கோட்டை, கண்டியூர் பகுதியில் பல நூறு ஏக்கரில் சம்பா நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயிர்கள் மேல் செம்மண் கிராவல் பரப்பப்படுகிறது. இதனால் திருவையாறு புறவழிச்சாலை திட்டத்துக்கு தடை விதித்து, மாற்று வழித்தடத்தில் திட்டத்தை நிறைவேற்றவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், எல்.விக்டோரியா கவுரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், புறவழிச்சாலை பணிகள் தொடங்கி 30 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. இழப்பீடு வழங்க ரூ.10.45 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 89 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 2.2 கிலோ மீட்டர் தூரத்தில் விவசாய நிலத்தில் அறுவடை முடிவதற்காக அப்பகுதியில் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. புறவழிச்சாலை திட்டம் 2020-ல் அறிவிக்கப்பட்டது என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், புறவழிச்சாலை அமைக்க அறிவிப்பானை வெளியானபோதே, அதை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்திருக்க வேண்டும். அறிவிப்பாணை வெளியிடப்பட்டு 3 ஆண்டுகள் முடிந்துவிட்டது. பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கு இழப்பீடும் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. மனுதாரருக்கு இழப்பீடு பெறுவதில் குறைபாடு இருந்தால் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து தீர்வு பெறலாம். மனு முடிக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.