சேலம்: சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த “நான் முதல்வன்” திட்டத்தில் பயன்பெற்றுவரும் கல்லூரி மாணவ, மாணவியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.
தமிழக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய ‘நான் முதல்வன்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தை சேலத்தில் தொடங்கி வைத்து, முதல்வர் ஸ்டாலின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருடன் உரையாடினார்.
இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், ‘நான் முதல்வன்’ திட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு, அதனை மேலும் ஊக்குவித்து அடுத்து அவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படிப் படிக்கலாம் என்று வழிகாட்டுவதுடன், தமிழில் தனித்திறன் பெறவும், சிறப்புப் பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசவும், நேர்முகத் தேர்வுக்கு தயாராவதற்கும் பயிற்சிகள் வழங்குவது குறித்து மாணவ, மாணவியர் பேசினர்.
மேலும் அவர்கள் பேசும்போது, “பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து உலகத்தரத்திலான பயிற்சிகளை கட்டணமின்றி கிராமப்புற மாணவர்கள் பெற்று, அதன் மூலம் பன்னாட்டு தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெறலாம். உயர்தொழில்நுட்பம் சார்ந்த தொழில் முனைவை ஊக்குவித்தும், அதன்மூலம் அவர்களுடைய பொருளாதாரம் மேம்படவும், வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப உலகத்திற்கு ஏற்ற திறன் பயிற்சிகளை “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் வழங்குவதன் மூலம் மாணவ சமுதாயத்திற்கு தன்னம்பிக்கை ஏற்படுகிறது’’ என்று கூறினர்.
நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் இறையன்பு, சேலம் ஆட்சியர் கார்மேகம், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் இன்னசென்ட் திவ்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.