புதுடில்லி, புதுடில்லி மற்றும் மும்பையில் உள்ள ‘பிரிட்டிஷ் பிராட்கேஸ்டிங் கார்ப்பரேஷன்’ என்ற பி.பி.சி., இந்தியா நிறுவன அலுவலகங்களில் நேற்று இரண்டாவது நாளாக வருமான வரித் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி, காகிதம் மற்றும் மின்னணு அடிப்படையிலான நிதி சார்ந்த தகவல்களை சேகரித்தனர்.
ஆவணப் படம்
ஐரோப்பிய நாடான பிரிட்டனை தலைமையகமாக வைத்து, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் பி.பி.சி., சர்வதேச ஊடக நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இது, கடந்த ௨௦௦௨ல் குஜராத் கலவரம் குறித்தும், இதில் அப்போது முதல்வராக இருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு தொடர்பு இருப்பதாக கூறியும், இரண்டு பகுதி கள் உள்ள ஆவணப் படங்களை வெளியிட்டது, பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கக் கூடியது, முற்றிலும் தவறான கருத்துக்கள் அடங்கியது எனக் கூறி, இந்த ஆவணப்படத்துக்கு இந்தியாவில் தடை செய்ய உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், உச்ச நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.
பிரச்னை
இந்நிலையில், சர்வதேச வரிவிதிப்பு மற்றும் பி.பி.சி., துணை நிறுவனங்களின் பரிமாற்ற விலை தொடர்பான பிரச்னையை விசாரிக்க, அந்நிறுவனத்தின் புதுடில்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆய்வுநடத்தினர்.
இந்த ஆய்வு நேற்றும் தொடர்ந்தது. ஆனால், ‘இந்த ஆய்வு சம்பந்தமாக எந்த ஒரு ‘நோட்டீசும்’ வருமான வரித் துறையால் அனுப்பப்படவில்லை. இருப்பினும், இதற்கு முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறோம்’ என, பி.பி.சி., நிறுவனம் தெரிவித்துள்ளது.
பி.பி.சி., வெளியிட்ட ஆவணப் படத்தை பகிர, ‘யு டியூப்’ சேனல்கள் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடை விதித்து, ஜன., ௨௧ல் மத்திய அரசு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை, ஏப்ரல் மாதம் நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்