காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் மாரடைப்பால் திடீரென மயங்கி விழுந்து அபாயகரமான கட்டத்துக்கு சென்ற ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுனரின் உயிரை காப்பாற்றிய அரசு செவிலியருக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 9 ஆண்டுகளாக செவிலியராக பணிபுரிந்து வருபவர் விஜய நிர்மலா. இவர் கடந்த வாரம் பணிமுடித்துவிட்டு தன்னுடைய சொந்த ஊரான கம்மார்பாளையம் செல்வதற்காக காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தார். இவர் நின்றிருந்த இடத்திலிருந்து சுமார் 20 அடி தூரம் தள்ளி நின்றிருந்த ராஜேந்திரன் என்கிற முதியவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். பேச்சு மூச்சு இல்லாமல் கீழே விழுந்து கிடந்த முதியவரை சுற்றி ஏராளமான மக்கள் கூடிநின்று என்ன செய்வது என தெரியாமல் நின்றுள்ளனர்.
இதைக்கண்ட செவிலியர் விஜய நிர்மலா சற்றும் தாமதிக்காமல், நாடி துடிப்புகள் குறைந்து பேச்சு மூச்சின்றி அபாய கட்டத்தில் இருந்த முதியவருக்கு, எந்தவித மருத்துவ உபகரணங்களும் இன்றி சிபிஆர் (இதய சுவாச மறு உயிர்ப்பு சிகிச்சை) முறையில் முதல் உதவி சிகிச்சையை செய்திருக்கிறார். முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட சற்று நேரத்திலேயே அந்த முதியவருக்கு சுயநினைவு திரும்பியது. அங்கு கூடியிருந்த போக்குவரத்து தொழிலாளர்கள் உட்பட பொதுமக்களும், பயணிகளும் அந்த முதியவர் இறந்து விட்டார் என்றே கருதிய நிலையில் அவருக்கு நினைவு திரும்பி வந்ததைக்கண்டு மிகவும் ஆச்சரியமுற்றனர்.
அது மட்டுமல்லாமல் 108 வாகனத்தை வரவழைத்து அதில் அந்த முதியவரை ஏற்றி காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்குள்ள சீனியர் மருத்துவர்களுக்கும் விஜய நிர்மலா தகவல் அளித்தார்.
கீழே விழுந்து பேச்சு மூச்சு இல்லாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒரு நபரை, எந்தவிதமான மருத்துவ உபகரணங்களுன்றி சிபிஆர் என்னும் சுவாசமும் நாடித்துடிப்பும் திரும்ப பெறுதல் முறையில் சிகிச்சை அளித்து முதியவரின் உயிரை மீட்டு தந்த அரசு செவிலியர் விஜய நிர்மலாவுக்கு ஏராளமான வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM