திருப்புவனம்: மகா சிவராத்திரியை முன்னிட்டு திருப்புவனம் வாரச்சந்தையில் நேற்று ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின. ஆந்திரா ஆடுகள் அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வாரச்சந்தை செவ்வாய் கிழமைதோறும் நடைபெறும். இதில் திருப்புவனத்தை சுற்றியுள்ள கிராமப்புற விவசாயிகள், தாங்கள் வளர்க்கும் ஆடுகளை விற்பனை செய்து விட்டு தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். மேலும், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்து ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவற்றை வாங்கி செல்வது வழக்கம்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று நடைபெற்ற வாரச்சந்தையில் ஏராளமானோர் ஆடு, கோழி வாங்க குவிந்தனர். இதனால் விலை கிடுகிடுவென உயர்ந்தது. 10 கிலோ எடையுடைய ஆடு ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரம் வரை விற்பனையானது. ஆந்திராவில் இருந்து அதிகமான ஆடுகள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டன. ஆந்திர ஆடுகள் நன்கு உயரமாகவும், கொம்புகள் வளைந்தும் 20 கிலோ எடை வரை இருக்கும். இவை ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. ஆந்திர மாநில ஆடுகளின் கறி சுவையாக இருக்காது என்றாலும் பலரும் வாங்கி சென்றனர். உள்ளூர் ஆடுகளை வாங்கி சென்று வளர்த்து விற்பனை செய்யலாம். ஆனால் ஆந்திரா ஆடுகளை வளர்க்க முடியாது. நேற்றைய சந்தையில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகள், ரூ.2 கோடி அளவில் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.