
மங்களூரு படப்பிடிப்பில் ரஜினியுடன் இணைந்த சிவராஜ்குமார்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தில் மொழிக்கு ஒருவர் என மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், தெலுங்கு நடிகர் சுனில் என பலரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
கடந்த மாதத்திலேயே ஐதராபாத், ஜெய்சல்மர் என வெவ்வேறு லொக்கேஷன்களில் நடந்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மங்களூரில் நடைபெற்று வருகிறது. ஐதராபாத்தில் மோகன்லாலுடனும் ஜெய்செல்மரில் ஜாக்கி ஷெராப்புடனும் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. ஏற்கனவே சென்னையில் சிவராஜ்குமார் நடித்த சில காட்சிகள் படமாக்கப்பட்டது.
தற்போது மங்களூருவில் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் சிவராஜ்குமார் இருவரும் இணைந்து நடிக்கும் முக்கியமான சண்டைக்காட்சி படமாக்கப்படுகிறது. ஷூட்டிங் முடிந்து இரவு நேரத்தில் ரஜினிகாந்த் மற்றும் சிவராஜ்குமார் இருவரும் இணைந்து ரிலாக்ஸாக பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இதை உறுதிப்படுத்தி உள்ளது.