திருவனந்தபுரம், அரசின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடுகள் நடந்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில், கேரள முதல்வரின் முன்னாள் முதன்மை செயலர் சிவசங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து, முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளன.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, மாநில அரசின் சார்பில், ‘லைப் மிஷன்’ என்ற பெயரில் வீடு கட்டித் தரும் திட்டம் துவக்கப்பட்டது.
இத்திட்டத்துக்கு வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறப்பட்டதில் பல மோசடிகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக, முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலர் எம். சிவசங்கரிடம், அமலாக்கத் துறை தொடர்ந்து மூன்று நாட்களாக விசாரித்தது.
விசாரணையின் முடிவில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சிவசங்கர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
திருவனந்தபுரத்தில் உள்ள மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துாதரகத்துக்கு தங்கம் கடத்தப்பட்டது தொடர்பான வழக்கிலும் சிவசங்கர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
அப்போது இந்த வழக்கில் முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
கடந்த ஜன., ௩௧ம் தேதி அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற சிவசங்கர், இந்த வழக்கில் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் சிவசங்கர் கைது செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், முதல்வர் பினராயி விஜயன் மீது கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளன.
‘ஏற்கனவே வீடு கட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது அதில் மோசடி நடந்துள்ள தற்கும், முன்னாள் முதன்மை செயலர் கைது செய்யப்பட்டதற்கும் முதல்வர் பினராயி விஜயன் பதிலளிக்க வேண்டும்’ என, எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்