ஆதார் இணைப்பு ஏன்?
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை தமிழக அரசு கட்டாயமாக்கியுள்ளது. மாநிலத்தில் பல்வேறு பிரிவினருக்கு மின்சார மானியங்களை வழங்கி வரும் தமிழக அரசு, பயனாளர்களின் தரவுகளை துல்லியமாக கணக்கெடுக்க முடிவெடுத்துள்ளது. அதற்கேற்ப குடியிருப்புகள், விசைத்தறி கூடங்கள் உள்ளிட்ட அனைத்து மின் இணைப்பு எண்களுடன் ஆதார் இணைப்பது கட்டாயமாக்கியுள்ளது. அந்தந்த பகுதியில் இருக்கும் மின்சார ஊழியர்கள் மூலம் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று ஆதார் எண் இணைப்புக்கு தேவையான ஆவணங்களை சேகரிக்கப்படுகின்றன.
ஆன்லைனில் ஆதார் இணைப்பு
இதுமட்டுமல்லாமல் ஆன்லைன் வழியாகவும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழக அரசு பிரத்யேகமாக https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற வலைதளத்தையும் அறிவித்துள்ளது. இதில் பொதுமக்கள் அனைவரும் சென்று தங்களின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா? என்பதையும் ஆன்லைனில் சரிபார்த்துக் கொள்ளலாம். ஏற்கனவே மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதற்கு பிப்ரவரி 15 ஆம் தேதி வரை தமிழக அரசு காலக்கெடு விதித்திருந்தது. அதனை இப்போது பிப்ரவரி 28 ஆம் தேதி வரை, அதாவது இம்மாதம் இறுதிக்குள் ஆதார் மற்றும் மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என இறுதிக் காலக்கெடு கொடுத்துள்ளது.
ஆதார் இணைக்கவில்லை என்றால்?
இதற்கு மேலும் காலக்கெடு நீட்டிக்கப்படாது என திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது தமிழக அரசு. ஒருவேளை மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கவில்லை என்றால் என்னவாகும்? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். இப்போது, குடியிருப்புகள் மற்றும் விசைத்தறி உள்ளிட்ட தொழில்கூடங்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஒருவேளை மின் இணைப்பு எண் ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், தமிழக அரசு வழங்கும் மானியம் முற்றிலுமாக நிறுத்தப்படும்.