ஈரோடு: முதல்வன் படம் போல் என்னிடம் ஒருநாள் முதல்வர் பதவியை கொடுத்து பாருங்கள் என்று ஈரோட்டில் நடந்த பிரச்சாரத்தில் சீமான் பேசியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் சீமான் கடந்த சில நாட்களாக பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறார். இன்று சூரம்பட்டி 4 சாலை பகுதியில் பிரச்சாரம் செய்த சீமான் இரவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது, “கோடநாடு கொலை வழக்கில் இரண்டே மாதத்தில் நீதி பெற்றுக்கொடுப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்தார் முதல்வர் ஸ்டாலின். ஆனால் இரண்டு வருடம் ஆகிவிட்டது. இன்னும் கொலை செய்தது யார் என்பது கண்டுபிடிக்க முடியவில்லை. முன்னாள் முதல்வர் வீட்டிலேயே கொலை, கொள்ளை என்றால் சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும். மாணவி ஸ்ரீமதி எப்படி இறந்தார் என்பதை மக்களுக்குச் சொல்லும் கடமை அரசுக்கு உள்ளது. ஆனால் அதையும் அரசு கண்டுகொள்ளவில்லை” என்று பேசினார் சீமான்.
தொடர்ந்து, “மக்களுக்கு முன் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணம் இந்த அரசுக்கு இல்லை. முதல்வன் படம் போல் என்னிடம் ஒருநாள் முதல்வர் பதவியை கொடுத்து பாருங்கள். சீமான் வந்தால் நன்றாக இருக்கும் என மக்கள் பேசுகிறார்கள். நானாக வரமுடியாது. ஓட்டுப்போட வேண்டும். நாம் ஒரேயொரு வாக்குப்பெட்டியை நம்பியுள்ளோம். ஆனால், மற்றவர்கள் ஆளுக்கொரு பணப்பெட்டியை நம்பியிருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.