ரேஷன் கடைகளில் ஜவ்வரிசி விநியோகம் – முதல்வரிடம் விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை

சேலம்: தமிழகத்தில் ரேஷன் கடைகளில் ஜவ்வரிசி விற்பனை செய்யவும், சத்துணவு திட்டத்தில் ஜவ்வரிசி கஞ்சி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் சேலத்தில் நடந்த ‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்தினர்.

சேலம் மண்டலத்துக்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கான ‘கள ஆய்வில் முதல்வர்’ திட்ட ஆய்வு கூட்டம் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நான்கு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கலந்துரையாடினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் சுந்தரம் கூறியது: “தமிழகத்தின் மிக முக்கியமான பயிராக மரவள்ளி கிழங்கு உள்ளது. அதிலிருந்து தயாரிக்க கூடிய ஜவ்வரிசியை வடமாநிலத்தில் அதிக அளவு பயன்படுத்தி வருகின்றனர். ஜவ்வரிசியை தமிழகத்தில் அதிக பயன்பாட்டுக்கு கொண்டு வரும் விதமாக, சிறையில் உள்ள கைதிகளுக்கு ஜவ்வரிசி சாப்பாடு, மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஜவ்வரிசி கஞ்சி, சத்துணவு திட்டத்தில் குழந்தைகளுக்கு ஜவ்வரிசி கஞ்சி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

மேலும், கிராமம் தோறும் இருக்கக்கூடிய ரேஷன் கடைகளில் ஜவ்வரிசியை விற்பனைக்கு கொண்டு வருவதன் மூலம் ஜவ்வரிசிக்கு நல்ல விலை கிடைத்து, மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணை இருந்தாலும், சேலம், நாமக்கல் மக்களுக்கு பயனில்லாமல் உள்ளது. எனவே, மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீர், வீணாக கடலில் கலக்கிறது. காவேரியில் இருந்து உபரி நீரை பொன்ணியாறு- திருமணிமுத்தாறு திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் சேலம், நாமக்கல் விவசாயிகள் பயன்பெறுவர்.

மேட்டூர் உபரி நீரை ஏரிகள் நிரம்பும் திட்டத்தால், நிலத்தடி நீர் உயரும். வேளாண் பொறியியல் துறையின் மூலமாக வாடகைக்கு விவசாயிகள் டிராக்டர் எடுத்து உழவு செய்து வருகின்றனர். எனவே, ஒவ்வொரு ஊராட்சிக்கும் இரண்டு டிராக்டர்கள் வழங்கி, குறைந்த வாடகையில் விவசாயிகள் உழவு தொழிலுக்கு டிராக்டர் பயன்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இதுசம்பந்தமாக பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார்” இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.