சென்னை: குரூப்-4 தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) விளக்கம் அளித்துள்ளது.
தமிழக அரசுத் துறைகளில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 9,870 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு கடந்த ஜூலை மாதம் 24-ம் தேதி நடைபெற்றது. மொத்தம் 18 லட்சத்து 36,535 பேர் தேர்வெழுதினர்.
தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதற்கிடையே, அரசுப் பணிகளில் மகளிருக்கான இடஒதுக்கீட்டு விதிகளில் உரிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்த கூடுதல் அவகாசம் தேவைப்பட்டதால், குரூப்-4 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது.
பின்னர், அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர காலஅட்டவணையில் பிப்ரவரி 2-வது வாரம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானது. ஆனால், தேர்வு முடிந்து சுமார் 7 மாதங்களாகியும், இதுவரை முடிவுகள் வெளியாகவில்லை. இதனால் வேலைவாய்ப்பு மற்றும் அடுத்தகட்டத் தேர்வுகளுக்குத் திட்டமிட்டிருந்த தேர்வர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, குரூப்-4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி விரைவாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.
இந்நிலையில், குரூப்-4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி அஜய் யாதவ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்திய அளவில் ஒப்பிடும்போது, குரூப்-4 தேர்வில்தான் அதிகபட்சமாக 18.36 லட்சம் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். அதிக அளவிலான தேர்வர்கள் பங்கேற்றுள்ளதால், தேர்வு முடிவுகள் வெளியீட்டில் எவ்விதத் தவறுகளும் நேரிடாதவாறு மதிப்பீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு விடைத்தாளின் இரு பகுதிகளும் தனித்தனியே ஸ்கேன் செய்து, திருத்தப்படுகின்றன. மேலும், டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தல்களையும் மீறி, விடைத்தாளில் தேர்வர்கள் செய்யும் 16 வகையான பிழைகளை கணினி மூலம் அடையாளம் கண்டு, சரிபார்க்க வேண்டியுள்ளது. இதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது.
மொத்தமாக ஸ்கேன் செய்ய வேண்டிய விடைத்தாள்களின் எண்ணிக்கை 36 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. இது முந்தைய தேர்வுகளுடன் ஒப்பிடும்போது, 3 மடங்கு கூடுதலான வேலையை உள்ளடக்கியதாகும். இதுதவிர, இதே காலகட்டத்தில் தேர்வாணையம் பல்வேறு பணித் தேர்வுகளையும் நடத்தி, அவற்றுக்கான முடிவுகளை வெளியிட்டு வருகிறது. எனவே, தேர்வர்களின் நலன் கருதி, மதிப்பீட்டுப் பணிகளை கவனத்துடன் முடித்து, குரூப்-4 தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதத்தில் வெளியிடப்படும்.
எனவே, குரூப்-4 தேர்வு தொடர்பான வெளியாகும், அடிப்படை ஆதாரமில்லாத தகவல்களை தேர்வர்கள் பொருட்படுத்த வேண்டாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.