புதுடெல்லி: ‘‘விமான போக்குவரத்து துறையில் உலகின் 3வது பெரிய சந்தையாக இந்தியா விரைவில் வளர்ச்சி அடையும்’’ என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 40 பெரிய அளவிலான விமானங்கள் உட்பட 250 விமானங்களை ஏர் இந்தியா வாங்க ஒப்பந்தம் செய்யப்படுவதாக டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் நேற்று அறிவித்தார். இதற்கான ஆன்லைன் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசுகையில், ‘‘இது ஒரு மைல்கல் ஒப்பந்தம்.
இந்தியாவின் வளர்ச்சியில் சிவில் விமான போக்குவரத்துறை ஒருங்கிணைந்த பகுதியாகும். எனவே சிவில் விமான போக்குவரத்து துறையை வலுப்படுத்துவது தேசிய உள்கட்டமைப்பு கொள்கையின் முக்கிய அம்சமாக உள்ளது. இதன்படி, கடந்த 8 ஆண்டுகளில் நாட்டின் மொத்த விமான நிலையங்களின் எண்ணிக்கை 74ல் இருந்து 147 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் விமான போக்குவரத்து துறையில் உலகின் 3வது பெரிய சந்தையாக இந்தியா மாறும். அடுத்த 15 ஆண்டுகளில் நமக்கு 2,000 விமானங்கள் தேவைப்படும்’’ என்றார்.