ஆக்ரா: உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவிலுள்ள தாண்டுப்புரா பகுதியைச் சேர்ந்தவர் ஜெய் சிங் (45). இ-ரிக்ஷா டிரைவரான ஜெய் சிங் கடந்த 8-ம் தேதி தனது நண்பர்கள் போலா, கேசவ் ஆகியோருடன் மது குடித்துள்ளார்.
அப்போது 3 பேருக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. 10 நிமிடங்களில் 3 பாட்டில் மதுவை (540 மி.லி. மது) குடிக்க வேண்டும் என்று ஜெய் சிங்கிடம் அவர்கள் சவால் விட்டுள்ளனர். இந்த சவாலை ஏற்ற ஜெய் சிங் 3 பாட்டில் மதுவை 10 நிமிடங்களில் குடித்துள்ளார். குடித்து முடித்ததும் அவர் மயங்கி விழுந்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தி போலா, கேசவ் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து தாஜ்கஞ்ச் போலீஸ் நிலைய அதிகாரி பகதூர் சிங் கூறும்போது, “மதுவால் உயிரிழந்த ஜெய் சிங்குக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.
ஜெய் சிங்கின் தம்பி சுக்பிர் சிங் கூறும்போது, “போலா, கேசவ் ஆகியோர் எனது சகோதரர் ஜெய்சிங்குடன் 10 ஆண்டுகளாக பழகி வருகின்றனர். அவரிடமிருந்து ரூ.60 ஆயிரத்துக்கும் மேல் அவர்கள் கடன் பெற்றுள்ளனர். தற்போது அவர் இறந்ததும் எங்கள் மீது புகார் செய்யாதீர்கள் என்று புலம்புகின்றனர்’’ என்றார்.