மகாராஷ்டிராவில், கடந்த ஆண்டு ஆளும் சிவசேனா கட்சியிலிருந்து ஏக்நாத் ஷிண்டே தன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் பிரிந்து பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்ததால், உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. அதோடு இதற்கு காரணமான ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவின் புதிய முதல்வராகவும் ஆனார்.

இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் மகாராஷ்டிரா ஆளுநர் சார்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “இந்தியா ஒரு பல கட்சி ஜனநாயகம். இங்கு தேர்தலுக்கு முந்தைய கூட்டணி, தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி என இரண்டு வகையான கூட்டணி இருக்கிறது.
தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி என்பது பொதுவாக எண்களை நிறைவு செய்வதற்கான ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டணியாகும். ஆனால், தேர்தலுக்கு முந்தைய கூட்டணி என்பது கொள்கைரீதியான கூட்டணி. பா.ஜ.க, சிவசேனா ஆகிய இரு கட்சிகளிடையே தேர்தலுக்கு முந்தைய கூட்டணி இருந்தது. ஆனால் இங்கு, உத்தவ் தாக்கரே தங்களை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியமைத்தார்” என்றார்.

அதைத் தொடர்ந்து பேசிய இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “ஆட்சியமைக்கப்படும்போது பெரும்பான்மையை நிரூபிக்கக் கோருவதுதான் ஆளுநரின் பணி. ஆளுநர்கள் அரசியலில் தலையிடக்கூடாது. அரசியல் கட்சிகளின் கூட்டணிகள் குறித்து ஆளுநர் பேசவேண்டிய தேவை என்ன இருக்கிறது…” என்று கூறினார்.