டெல்லி: ஈரோடு கிழக்கு தொகுதியின் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்க தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகுவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது.
திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பில் ஈபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசு போட்டியிடுகிறார். இதேபோல் தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது. இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு கை சின்னமும், அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னமும், தேமுதிக வேட்பாளருக்கு முரசு சின்னமும் வழங்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இடைத்தேர்தலில், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் தபால் வாக்கு பெறும் பணி இன்று தொடங்கியுள்ளது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியின் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்க தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகுவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் உள்ள 40,000 வாக்காளர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் வசிக்கவில்லை என்றும் சுமார் 8,000 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருமுறை இடம்பெற்றிருப்பதாகவும் அதிமுக தரப்பில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சத்யபிரதா சாகுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல் வாக்காளர்களின் விவரங்கள் கசிந்தது தொடர்பாகவும் தேர்தல் விளக்கம் கேட்டுள்ளது.