ஈஷா மகாசிவராத்திரி விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்பு-ஏற்பாடுகள் தீவிரம்

கோவை ஈஷா யோகாவில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தமிழகம் வரவுள்ள நிலையில், சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பழங்குடி சமூகத்தில் இருந்து முதல்முறையாக குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, ஈஷா மகா சிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். குடியரசுத் தலைவராக பதவியேற்றப் பிறகு இவ்விழாவிற்காக அவர் முதல்முறையாக தமிழ்நாடு வருகிறார். அவருடைய வருகையொட்டி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் நடைபெறும் இவ்விழா உலக புகழ்பெற்ற ஆதியோகி முன்பு பிப்ரவரி 18-ம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இவ்விழா கடந்த 28 ஆண்டுகளாக ஈஷாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழா தியானலிங்கத்தில் நடைபெறும் பஞ்ச பூத க்ரியையுடன் தொடங்கும். இதை தொடர்ந்து லிங்க பைரவி தேவி மகா யாத்திரை நடைபெறும். பின்னர், விழா மேடையில் குடியரசுத் தலைவர் மற்றும் ஜக்கி வாசுதேவ் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.
image
அதன்பிறகு, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரபல கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் விடிய விடிய நடைபெறும். இதற்கிடையில் நள்ளிரவு மற்றும் அதிகாலை பிரம்ம முகூர்த்த காலத்தில் ஜக்கி வாசுதேவ் வழிநடத்தும் சக்தி வாய்ந்த தியான நிகழ்வுகளும், சத்சங்கமும் நடைபெறும்.
குறிப்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல நாட்டுப் புற கலைஞர் வேல்முருகன், ராஜஸ்தானி நாட்டுப் புற கலைஞர் மாமே கான், இசையமைப்பாளரும், பிரபல சித்தார் இசை கலைஞருமான நிலத்ரி குமார், டோலிவுட் பின்னணி பாடகர் ராம் மிரியாலா உள்ளிட்டோர் பங்கேற்று கலை நிகழ்ச்சிகள் வாயிலாக பக்தர்களை இரவு முழுவதும் விழிப்பாகவும், விழிப்புணர்வாகவும் வைத்து கொள்ள உள்ளனர். விழாவிற்கும் வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு இரவு முழுவதும் மகா அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
கடந்தாண்டு ஆஸ்கர் மற்றும் கிராமி விருது விழாக்களை பின்னுக்கு தள்ளிய ஈஷா மகா சிவராத்திரி விழா இந்தாண்டு தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி, சைனீஸ், போர்ச்சுகீஸ், ஸ்பானீஸ், பிரெஞ்சு உட்பட 21 மொழிகளில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளது. இதுதவிர, மதுரை, திருச்சி, சென்னை, வேலூர், நாகர்கோவில் உட்பட தமிழ்நாட்டில் 32 இடங்களில் நடைபெறும் ஈஷா மகா சிவராத்திரி கொண்டாட்டங்களில் பொதுமக்கள் இலவசமாக நேரில் பங்கேற்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.