‘ஒரு கோடி ரூபாய் கேட்டார்’- கே.பி.முனுசாமி மீது ஓபிஎஸ் ஆதரவாளர் குற்றச்சாட்டு-ஆடியோ ரிலீஸ்

கொளத்தூர் தொகுதியில் சீட் பெற்றுத்தர அதிமுக எம்.எல்.ஏ.வான கே.பி.முனுசாமி ஒரு கோடி ரூபாய் கேட்டதாக, ஓபிஎஸ் ஆதரவளார் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பு குற்றச்சாட்டை செய்தியாளர்கள் முன் வைத்துள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, “கே.பி. முனுசாமி என்னிடம் 1 கோடி பணம் கேட்டதற்கான ஆடியோவை இப்போது வெளியிடுகிறேன். இதற்குப் பதில் கூறாவிட்டால் தங்கமணி, வேலுமணி குறித்த வீடியோவையும் வெளியிடுவேன். ‘அதிமுகவில் ஓபிஎஸ்க்கு இடமே கிடையாது, அதிமுகவிலிருந்து அவர் நீண்ட தூரம் சென்று விட்டார்’ என கேபி. முனுசாமி கூறியுள்ளார். ஆனால், கே.பி.முனுசாமிக்கு பதவி கொடுத்ததே ஓ.பன்னீர்செல்வம்தான்.
அதிமுகவில் இருந்து கொண்டு அன்புமணிக்கு உழைத்தவர் கே.பி. முனுசாமி. வாங்கும் பணத்திற்காக உழைப்பவர் அவர், பசை உள்ள இடத்தில்தான் கே.பி. முனுசாமி இருப்பார். கே.பி.முனுசாமி பற்றி தொண்டர்களுக்கு தெரிய வேண்டும் என்பதால் ஆடியோ வெளியிடுகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கொளத்தூர் தொகுதி சீட் பெற்றுத்தர கே.பி.முனுசாமி ஒரு கோடி ரூபாய் கேட்டதாகப் புகார் தெரிவித்துள்ள கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, பணத்தை பெற்றுக் கொள்ள தனது மகனை அனுப்புவதாக கே.பி.முனுசாமி கூறியதாக குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி புகாருக்கு பதில்தர கே.பி.முனுசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.
முன்னதாக, “ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும். இரட்டை இலை சின்னம் வெற்றிபெற வேண்டும் என அ.தி.மு.க.வின் லட்சக்கணக்கான தொண்டர்கள் உழைக்கிறார்கள். அவர்களைப்போல ஓ.பன்னீர்செல்வத்தால் உழைக்க முடியுமா? எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகழ் நிலைக்க வேண்டும் என்று தொண்டர்கள் பாடுபடுகிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வை விட்டு வெகுதூரம் சென்று விட்டார். எனவே அவரை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்க வாய்ப்பில்லை”  என்று  ஈரோட்டில் கே.பி.முனுசாமி நேற்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.