குஜராத் மாநிலம் சென்றிருக்கும் தமிழ்நாடு செய்தியாளர்களை, அகமதாபாத்தில் அந்த மாநில முதல்வர் பூபேந்திர படேல் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவரிடம், `தமிழ்நாட்டில் பல்வேறு சமூகத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன… மக்கள் நலத்திட்டங்களாக அவை மக்களைச் சென்று சேர்வது உறுதி செய்யப்படுகிறது. அதே போன்று குஜராத்தில் என்னென்ன திட்டங்கள் இருக்கின்றன?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த முதல்வர் பூபேந்திர படேல், “குஜராத் மாநிலத்தின் நிதி சிறப்பான முறையில் கையாளப்பட்டு வருகிறது. அனைவருக்கும் வளர்ச்சி என்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து நடத்தி வருகிறோம். தேவையானவர்களுக்குத் தேவையானவற்றை மட்டும் இலவசமாக வழங்கி வருகிறோம். இதனால் நிதிப்பற்றாக்குறை என்பது எங்களுக்கு இல்லை. பல நடவடிக்கைகளின் காரணமாக குஜராத் தற்போது மின்மிகை மாநிலமாக இருக்கிறது. அடுத்த கட்டமாகக் குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்குவதும், சோலார் போன்ற திட்டங்களின் வழி மின்சார உற்பத்திக்கு அதிக முக்கியத்துவமும் கொடுத்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்தியாளர்கள் அவரிடம், `மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. அது குறித்து உங்கள் பார்வை என்ன?’ எனக் கேள்வி கேட்டபோது, “இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வளர்ச்சி என்பது மிக முக்கியமாக இருக்க வேண்டும். எங்களின் எண்ணமும் அதுதான். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அனைத்து மாநிலங்களின் வளர்ச்சிக்கும் பயனளிக்கக் கூடியதாக இருக்கும்” என்று பதிலளித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள், `குஜராத்தில் பா.ஜ.க கடந்த தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பிரசாரம் செய்வீர்களா?’ என்று கேட்டனர். அதற்குப் பதிலளித்த முதல்வர், “எனக்குத் தமிழ் பேசத் தெரியாததால் தமிழகத்துக்குப் பிரசாரத்துக்கு வருவேனா என்பது தெரியவில்லை. இருந்தாலும் கட்சி அழைத்தால் தமிழகத்துக்கு வருவேன்” என்றார். குஜராத் முதல்வரின் செய்தியாளர் சந்திப்பின்போது, குஜராத் மாநில முதன்மைச் செயலாளர் கைலாசநாதன், வருவாய்த்துறை செயலாளர் ஸ்வரூப், மாவட்ட ஆட்சியர் நாகராஜன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.