சேலம்: முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால், மாணவர் சேர்க்கை அதிகரித்திருப்பதாக, சேலத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சேலம் ஜங்சன் அடுத்த முல்லைநகரில் செயல்பட்டு வரும் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, பள்ளியில் காலை சிற்றுண்டி எத்தனை குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது? அவை தரமானதாக உள்ளதா? என ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். மேலும், வகுப்பறையில் கற்றல், கற்பித்தல் நடைமுறை, அதற்கான உபகரணங்கள் பயன்பாடு குறித்து கேட்டதுடன், செல்போன் ஆப் மூலமாக மேற்கொள்ளப்படும் வருகைப்பதிவேடு குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் பள்ளிக் குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார். தொடர்ந்து, பள்ளியின் கழிப்பறைகளை பார்வையிட்ட அமைச்சர், எப்போதும் சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து, மணியனூருக்கு சென்ற அமைச்சர், அங்குள்ள தொடக்கப்பள்ளியிலும், காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தார். பள்ளி குழந்தைகளுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.
பின்னர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், ‘‘ஒவ்வொரு மாவட்டத்திற்கு செல்லும்போதும் அங்குள்ள பள்ளிகளில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு, அதுகுறித்த அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தால் மாணவர்கள் பள்ளிக்கு காலையில் விரைவாக வருகின்றனர். மேலும், புதிதாக மாணவர்களின் சேர்க்கையும் அதிகரித்துள்ளது’’ என்றார்.