சிட்டிசன் திரைப்பட பாணியில் தவிக்கும் நவீன அத்திப்பட்டி! கண்மாயை காணவில்லை

மதுரை: அமைச்சர் மூர்த்தியின் தொகுதியில் கண்மாயை காணவில்லை என கூறி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் – அடிப்படை வசதியின்றி சிட்டிஜன் திரைப்படத்தில் வரும் அத்திப்பட்டி போல மாறிவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளனர். மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெள்ளியங்குன்றம் ஊராட்சி உட்பட வெ.அழகாபுரி கிராமம். இந்த கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இந்த கிராமத்தில் 3.5ஏக்கர் பரப்பளவில் அழகாபுரி கண்மாய் இருந்துவந்துள்ளது.

 ஆனால் இந்த கண்மாய் மற்றும் கண்மாய்க்கு செல்லும் வழிப்பாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தற்போது முழுமையாக கண்மாய் என்பதே இல்லாத நிலையில் உள்ளது. இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு அளித்தபோது கண்மாய் இருந்ததற்கான ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கண்மாயை காணவில்லை 

இந்நிலையில் இந்த கண்மாய் பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு பிளாட்கள் விற்பனை செய்வதற்கான அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் கிராம மக்கள் பாதிக்கப்பட்டு கண்மாய் ஆக்கிரமிப்பால் நிலத்தடி நீர் குறைந்து காணப்படுவதோடு எந்தவித அடிப்படை வசதிகள் இன்றியும் வாழ்ந்துவருவதாகவும் , காணாமல் போன கண்மாயை மீட்டுதருமாறு இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள்  நேரில் வந்து புகார் மனு அளித்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கிராம மக்கள், காணாமல் போன அழகாபுரி கண்மாயை கண்டுபிடித்து தர வேண்டும் , கிராம நத்தத்தை அழகாபுரி கிராம பொது பயன்பாட்டிற்கு தண்ணீர் தொட்டி, நாடகமேடை மற்றும் அழகாபுரி கிராம பொதுத் தேவைக்கு பயன்படுத்த ஆக்கிரமைப்பை அகற்றி கிராமத்திற்கு தர வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

தங்களது கிராமத்திற்கு குடிநீர், கழிப்பிடம், அங்கன்வாடி, ரேசன்கடை உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லாத நிலையில் சிட்டிசன் படத்தில் வரும் அத்திப்பட்டி கிராமம் போல மாறிவிட்டதாகவும் தெரிவித்தனர்.

அமைச்சரின் சொந்த தொகுதியிலயே அடிப்படை வசதியின்றி கிராம மக்கள் இருப்பதாகவும், கண்மாய் காணாமல் போனதாகவும் கிராமத்தினர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். 

இதேபோல, குளம் மற்றும் கிணற்றை காணவில்லை என்று விராலிமலை ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அருகில் போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், இவர் வசிக்கும் பகுதிகளில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனக் கூறி 2017 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்திருந்தார். நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அவர், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து, தீர்ப்பு வெளியான பிறகும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அவர் போராட்டம் நடத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.