
சினிமாவாகிறது மருது சகோதர்கள் வாழ்க்கை
தற்போது இந்தியா முழுக்கவே சரித்திர கதைகளுக்கு தனி மவுசு ஏற்பட்டிருக்கிறது. தமிழில்கூட பொன்னியின் செல்வன் பிரமாண்ட வெற்றி பெற்றது. இந்த நிலையில் தமிழில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு வீரமரணம் அடைந்த மருது சகோதரர்களின் வரலாறு 'மருது ஸ்கொயர்' என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.
இதனை ஊமை விழிகள், உழவன் மகன் படங்களை இயக்கிய ஆர்.அரவிந்தராஜ் இயக்குகிறார். தற்போது அவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாற்றை படமாக்கி வருகிறார். இதில் ஜே.எம்.பஷீர் என்பவர் முத்துராமலிங்க தேவராக நடிக்கிறார். அவரே 'மருது ஸ்கொயர்' படத்தில் பெரிய மருதுவாக நடிக்கிறார். மருது சகோதரர்களின் தலைவியாக விளங்கிய வீரமங்கை வேலு நாச்சியார் கேரக்டரில் 2019ல் மிஸ்.மெட்ராஸ் டைட்டில் வென்ற ஆயிஷா நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.
பொதுவாக மருது சகோதரர்களின் சரித்திர கதையை படமாக்க பல நூறு கோடிகள் வேண்டும். சிறிய தயாரிப்பு நிறுவனத்தால் இது சாத்தியமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.