இந்திய – சீன எல்லைப்பகுதியில் 1962-ம் ஆண்டு சீனா அத்துமீறலில் ஈடுபட்டது. அப்போது, இரு நாடுகளுக்கும் இடையே எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டைப் பாதுகாப்பதற்காக 90,000 வீரர்களுடன் இந்தோ – திபெத் எல்லைக்காவல் படை ஏற்படுத்தப்பட்டது.
சமீப காலமாக, கிழக்கு லடாக், அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில் சீன ராணுவம் அவ்வப்போது அத்துமீறல் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறது. இந்தச் சூழலில், சீன ராணுவத்தின் அத்துமீறலைத் தடுப்பதற்கான திட்டங்களை மத்திய அரசு வகுத்திருக்கிறது.

அதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியிருக்கிறது. அதன்படி, இந்தோ – திபெத் எல்லைக் காவல் படையை வலுப்படுத்தும் வகையில், புதிதாக ஏழு படைப்பிரிவுகள் உருவாக்கப்படவிருக்கின்றன. அந்த படைப்பிரிவுகளில் புதிதாக 9,400 வீரர்கள் சேர்க்கப்படவிருக்கிறார்கள். அவர்கள், புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் 47 எல்லை நிலைகள், 12 படை முகாம்களில் பணியமர்த்தப்படவிருக்கிறார்கள்.
லடாக்கின் எல்லைப் பகுதியில் அனைத்து காலநிலைகளிலும் தடையற்ற போக்குவரத்தை உறுதிசெய்வதற்காக 4.1 கி.மீ தொலைவுக்கு நிமு – பதாம் – டர்ச்சா சாலையை இணைக்கும் சுரங்கப்பாதை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. ரூ.1,681 கோடி செலவில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்படவிருக்கிறது. இதற்கான பணிகளை 2025-ம் ஆண்டுக்குள் முடிப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

இந்தியாவின் வடக்கு எல்லையில் அமைந்திருக்கும் கிராமங்களின் விரிவான மேம்பாட்டுக்காக ‘ஒளிரும் கிராமங்கள் திட்டம்’ உருவாக்கப்படவிருக்கிறது. ரூ.4,800 கோடியில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இதன் மூலம் எல்லைப்பகுதி கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை மேம்படும் என்று மத்திய அரசு கூறுகிறது.
இந்த நிதியில், ரூ.2,500 கோடி வடக்கு எல்லை கிராம சாலைகளின் மேம்பாட்டுக்கு செலவிடப்படவிருக்கிறது. எல்லைப் பகுதியில் இருக்கும் கிராமங்களில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையிலும் சில திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தவிருக்கிறது.

லடாக், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருக்கும் 2,966 கிராமங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் வரும் என்கிறது மத்திய அரசு. இத்தகைய திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலமாக, எல்லைக் கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த கிராமங்களைவிட்டு வெளியேற மாட்டார்கள். மேலும், இந்த கிராமங்களுக்கு மாணவர்கள் தைரியமாக வருவார்கள் என்று அரசு எதிர்பார்க்கிறது.