சென்னை: சென்னையைத் தலைமையிடமாக கொண்டு ரியல் எஸ்டேட், ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் 4 நிறுவனங்களில் வரி ஏய்ப்பு நடந்ததாக வந்த புகாரின் அடிப்படையில், வருமான வரித் துறை புலனாய்வு அதிகாரிகள் நேற்று முன்தினம் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
சென்னையில் உள்ள அந்த நிறுவனங்களின் அலுவலகங்கள், உரிமையாளர்களின் வீடு, நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதேபோல, கோவை, புதுச்சேரி, வேலூர், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலும், அந்த நிறுவனங்களுக்குத் தொடர்புடைய இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. தமிழகத்தில் 40 இடங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் 20 இடங்கள் என மொத்தம் 60 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், இரண்டாவது நாளாக நேற்றும் வருமான வரித் துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும், சோதனை முடிந்த பிறகே முழு விவரங்களைத் தெரிவிக்க முடியும் என்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.