விளையாட்டு போட்டிகள்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சேலம் மாவட்ட பிரிவு சார்பில் 2022-23-ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையட்டு போட்டி நேற்று தொடங்கியது. ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் நாளான நேற்று பள்ளிகளுக்கு இடையேயான மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன.கூடைப்பந்து, கைப்பந்து, டேபிள் டென்னிஸ், இறகுப்பந்து, கிரிக்கெட் ஆகிய போட்டிகள் சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம், கோட்டை மாநகராட்சி கிளப் ஆகிய இடங்களில் நடைபெற்றது. கிரிக்கெட் போட்டி ஏ.என்.மங்கல் பி.என்.ஆர். மைதானம் உள்பட 2 இடங்களில் நடைபெற்று வருகிறது.
5 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு
இந்த போட்டியில் பல்வேறு பள்ளிகளில் இருந்து 200-கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. நீச்சல் போட்டியில் மட்டும் 300-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். மொத்தம் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் சிறந்து விளங்குவர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுவர்
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் கூறும் போது, மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் வருகிற 28-ந் தேதி வரை நடைபெறுகிறது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவருக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த போட்டிகளில் பங்கு பெற இணையதளத்தில் பதிவு செய்த நபர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். மாவட்டத்தில் போட்டிகளில் பங்கேற்பதற்காக 41 ஆயிரத்து 481 பேர் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்தவர்களின் எண்ணிகையில் சேலம் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது என்றார்.