புதுடெல்லி: தென் மேற்கு டெல்லியில் காதலித்த பெண்ணை கொலை செய்து குளிர் சாதனப் பெட்டியில் அடைத்து வைத்த காதலன், அன்றே வேறொரு பெண்ணை திருமணம் செய்ய சென்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் ஷரத்தா வாக்கர் என்ற இளம்பெண்னை, அவரது காதலனே கொடூரமாக கொலை செய்து குளிர்சாதனப் பெட்டியில் அடைத்து வைத்து, 35 துண்டுகளாக வெட்டி வீசி சென்ற சம்பவம் நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், தலைநகரை அலற வைக்கும் வகையில் அதே போன்ற மற்றொரு கொடூர சம்பவம் தென் மேற்கு டெல்லியில் நடந்துள்ளது.
தென்மேற்கு டெல்லி மித்ரான் கிராமத்தில் உணவகம் (தாபா) ஒன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு, குளிர் சாதனப் பெட்டியில் அடைத்து வைத்திருப்பது குறித்து போலீசாருக்கு நேற்று முன்தினம் காலை தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று பெண்ணின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. கொல்லப்பட்ட பெண்ணின் பெயர் நிக்கி யாதவ். உத்தம் நகரை இவரும், சாகில் கெலாட் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். சில ஆண்டுகளாக இருவரும் நெருங்கிய உறவில் இருந்த நிலையில், கெலாட்டுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கடந்த 9ம் தேதி நிச்சயம் நடந்துள்ளது.
இதை அறிந்த நிக்கி, சாகிலுடன் சண்டை போட்டுள்ளார். இதனால், அவரை சமாதானம் செய்வதற்காக சாகில் காரில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, காரிலேயே 2 பேருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் சாகில், நிக்கியை காரிலேயே செல்போன் டேட்டா கேபிலைக் கொண்டு கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின்னர், நீண்ட நாட்களாக மூடி வைத்துள்ள தனது தாபாவுக்கு உடலை எடுத்து சென்று, அதில் உள்ள குளிர் சாதனப் பெட்டியில் அடைத்துள்ளார். பின்னர், நிச்சயம் செய்த பெண்ணை திருமணம் செய்வதற்காக சென்றுள்ளார். போலீஸ் விசாரணையில் இத்தகவல்கள் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக,சாகிலை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.