திரிபுரா சட்டமன்ற தேர்தல்: மும்முனை போட்டியில் முந்தப் போவது யார்? 10 விஷயங்கள்!

திரிபுரா சட்டமன்ற தேர்தல்… அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக 2023 திகழ்கிறது. ஏனெனில் 9 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் தேர்தல் திரிபுராவில் இன்று நடக்கிறது.

மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 259 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். பாஜக – ஐபிஎஃப்டி, சிபிஎம் – காங்கிரஸ், திப்ரா மோதா என மும்முனை போட்டி நிலவுகிறது. 31 இடங்களை கைப்பற்றும் கட்சியே பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றும். இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் மார்ச் 2ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.வாக்குப்பதிவை ஒட்டி இன்றைய தினம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 3,337 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,100 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவை எனக் கண்டறியப்பட்டுள்ளதால் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.திரிபுரா மாநிலத்தில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவில் 31 ஆயிரம் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் 28.13 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அதில் 13.53 லட்சம் பேர் பெண்கள்.அமைதியான முறையில் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி கிட்டி கிரண்குமார் தினகரோ உறுதி அளித்துள்ளார்.திரிபுரா மாநில அரசியலை பொறுத்தவரை 25 ஆண்டுகால மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு 2018ல் பாஜக முடிவு கட்டியது. அதன்பிறகு பிப்லாம் தேப் முதல்வராக பதவியேற்றார். கடந்த ஆண்டு மாணிக் சாகா புதிய முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.கடந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு கிராமமாக பாஜக தனது செல்வாக்கை பலப்படுத்தி கொண்டிருக்கிறது. இதற்கான பலனை இந்த தேர்தலில் பார்க்கலாம் என்று அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.அதேசமயம் கடந்த தேர்தலில் பாஜக (43.59%), சிபிஎம் (42.22%) இடையிலான வாக்கு சதவீத வித்தியாசம் மிகவும் குறைவே ஆகும். எனவே இம்முறை பாஜகவை முந்துமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்த தேர்தலில் பாஜக 55 இடங்களிலும், ஐபிஎஃப்டி 6 இடங்களிலும் போட்டியிடுகிறது. ஒரு தொகுதியில் பாஜக உடன் கூட்டணி கட்சியான ஐபிஎஃப்டி மோதுவது சுவாரஸியமூட்டும் விஷயமாக பார்க்கப்படுகிறது. சிபிஎம் 47 இடங்களிலும், காங்கிரஸ் 13 இடங்களிலும் போட்டியிடுகிறது.திப்ரா மோதா 42 இடங்களில் களம் காண்கிறது. திரிணாமூல் காங்கிரஸ் 28 இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 58 இடங்களிலும் போட்டியிடுகின்றனர்.திரிபுராவில் பாஜக முதல்முறை ஆளுங்கட்சியாக இருந்து கொண்டு தேர்தலை சந்திக்கிறது. ஆகையால் மிகவும் பலமான போட்டியாக இருக்கும் என்றும், முடிவுகள் மீது பெரும் எதிர்பார்ப்பு இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.