பெர்ஹாம்பூர் : ஒடிசாவில், வேகமாக வந்த கார் திருமண கூட்டத்துக்குள் திடீரென பாய்ந்ததில்,11 வயது சிறுமி உட்பட மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்; 15 பேர் பலத்த காயமடைந்தனர்.
ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்கு, கஞ்சாம் மாவட்டத்தில், கோபால்பூர் பகுதியில் உள்ள மாண்டியபள்ளி என்ற இடத்தில், நேற்று முன்தினம் இரவு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக, மணமகளின் வீட்டருகே உள்ள சாலையோரம் உறவினர்கள் ௫௦க்கும் மேற்பட்டார் கூடியிருந்தனர்.
அப்போது, அப்பகுதியில் தாறுமாறாக வந்த சொகுசு கார் ஒன்று கூட்டத்துக்குள் பாய்ந்தது. இதில், சம்பவ இடத்திலேயே 11 வயது சிறுமி உட்பட மூன்று பெண்கள் பலியாகினர்; 15 பேர் பலத்த காயமடைந்தனர். இவர்களில், மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த விபத்துக்குக் காரணமான கார் டிரைவர் மற்றும் அதில் பயணித்தவர்கள், காரை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடினர். சத்திஸ்கர் மாநில பதிவெண் உடைய இந்த காரில் வந்தவர்களில் ஒருவரை, போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்துக்குக் காரணமான காரின் டிரைவர் மது போதையில் இருந்ததாக, காயமடைந்த ஒருவர் தெரிவித்தார்.
இச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் நவீன் பட்நாயக், இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்க உத்தரவிட்டார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானும் இரங்கல் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement