சென்னை: மத்திய பிரதேசத்தில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான காவல் பணித் திறனாய்வுப் போட்டியில், சென்னை மத்தியக் குற்றப் பிரிவைச் சேர்ந்த முதல்நிலைக் காவலர் தங்கப் பதக்கம் வென்றார்.
மத்திய பிரதேச மாநிலம், போபாலில் அனைத்திந்திய 66-வது காவல் பணித் திறனாய்வுப் போட்டிகள் கடந்த 13-ம்தேதி தொடங்கின. வரும் 17-ம்தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன.
அறிவியல் சார்ந்த புலனாய்வு, கணினி விழிப்புணர்வு, புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு, நாசவேலை தடுப்பு சோதனை, மோப்ப நாய்களின் திறமை ஆகிய 5 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
அறிவியல் சார்ந்த புலனாய்வுப் போட்டியில் 23 மாநிலங்களைச் சேர்ந்த 60 போலீஸார் பங்கேற்றனர். இதில், தமிழக காவல் துறை அணியைச் சேர்ந்த, சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப் பிரிவில் பணிபுரிந்து வரும் முதல்நிலைக் காவலர் எம்.ஆனந்த பெருமாள் முதலிடம் பிடித்து, தங்கப் பதக்கம் வென்றார். காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பாராட்டியுள்ளார்.