தென்காசி மாவட்டத்தில் திருமணமான 4 மாதத்தில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் மாதாபுரம் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி விக்னேஷ் (25). இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆலங்குளம் பகுதியை சேர்ந்த காஞ்சனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மன வேதனையில் காணப்பட்ட விக்னேஷ், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து ராமநதி அணைக்கும் செல்லும் பகுதியில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதைபார்த்த அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக இது குறித்து கடையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விக்னேஷை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விக்னேஷ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து கடையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.