தென்காசி வாலிபரை திருமணம் செய்த குஜராத் பெண்ணை கேரளாவிலுள்ள உறவினரிடம் ஒப்படைக்க வேண்டும்: போலீசார் விசாரணையை தொடரவும் உத்தரவு

மதுரை: தென்காசி வாலிபரை திருமணம் செய்த குஜராத் பெண் கிருத்திகாவை, கேரளாவிலுள்ள அவரது சித்தப்பாவிடம் ஒப்படைக்க வேண்டும். குற்றாலம் போலீசார் விசாரணையை தொடரலாம் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம், கொட்டாகுளத்தை சேர்ந்த மாரியப்பன் வினித், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘காதலித்து திருமணம் செய்த கிருத்திகா படேலை அவரது பெற்றோர் கடத்தி சென்று விட்டனர். கிருத்திகாவை மீட்டு ஆஜர்படுத்துமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

 இதையடுத்து கடந்த 7ம் தேதி விசாரணைக்கு ஆஜரான கிருத்திகாவை குற்றாலம் நன்னகரத்தில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து, கடந்த 11ம் தேதி செங்கோட்டை மாஜிஸ்திரேட் முன்பு அவர் வாக்குமூலம் அளித்தார். கிருத்திகாவை அவரது தாத்தா சிவாஜி படேலிடம் ஒப்படைப்பது தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு போலீஸ் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அறிக்கையளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. காப்பகத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட கிருத்திகாவிடம் நீதிபதிகள் விசாரித்தனர். அரசு கூடுதல் குற்றவியல் வக்கீல் மீனாட்சிசுந்தரம், ‘‘கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்களுக்கு சிவாஜி படேல் அடைக்கலம் கொடுத்து பாதுகாத்துள்ளார். எனவே, அவரிடம் கிருத்திகாவை ஒப்படைக்கக்கூடாது’’ என்றார். இதையடுத்து கிருத்திகாவிடம் நீதிபதிகள் மீண்டும் விசாரித்தனர். அப்போது கேரளா பல்லுறுத்தி பகுதியிலுள்ள சித்தப்பா ஹரீஷ் படேல் வீட்டிற்கு செல்வதாக கூறினார். தனது விருப்பத்தை கடிதமாகவும் எழுதிக்கொடுத்தார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘அவர் மேஜர் என்பதால் அவரது விருப்பப்படி செல்லலாம். கிருத்திகாவின் பாதுகாப்பிற்கு அவரை அழைத்துச் செல்பவர்களே ெபாறுப்பு. கிருத்திகா கடத்தப்பட்டது தொடர்பான வழக்கின் உரிய விசாரணை மற்றும் மேல்நடவடிக்கையை குற்றாலம் போலீசார் தொடரலாம். போலீசாரின் விசாரணைக்கு கிருத்திகா மற்றும் அவரது தரப்பினர் ஒத்துழைக்க வேண்டும். கிருத்திகா தன்னை திருமணம் செய்தது தொடர்பாகவும், அவருடன் தனக்குள்ள உறவு குறித்தும் மனுதாரர் உரிய கீழமை நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம்’’ என உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.