மயிலாடுதுறை மாவட்டத்தில் திருமணம் செய்ய மறுத்த காதலியை திருப்புளியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் காஞ்சிவாய் எழுவேலி பகுதியை சேர்ந்தவர் ஓட்டுநர் செந்தமிழன்(25). இவர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வரும் மணல்மேடு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் செந்தமிழனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதையறிந்த அந்தப் பெண் செந்தமிழனிடம் பேசுவதை தவிர்த்துள்ளார்.
ஆனால் செந்தமிழன் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண்ணை பூர்த்தி வந்துள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து அந்தப் பெண் வந்தபோது, அவரிடம் செந்தமிழன் மறுபடியும் திருமணம் செய்து கொள்ளுமாறு தகராறு செய்துள்ளார். இதை அந்தப் பெண் மறுத்ததால் ஆத்திரமடைந்த செந்தமிழன், தான் வைத்திருந்த திருப்புளியால் சரமாரியாக அந்தப் பெண்ணின் முகம், தலை, கைகளில் குத்தியுள்ளார்.
இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் அந்தப் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் செந்தமிழனை கைது செய்தனர்.