மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு புதுப்பொலிவு பெறும் குலதெய்வ கோயில்கள்: கொண்டாட்டத்திற்கு தயாராகும் பொதுமக்கள்

திருமங்கலம்: மாசி மகா சிவராத்தி நாளை மறுநாள் கொண்டாட உள்ள நிலையில், தென்மாவட்டங்களில் குலதெய்வக் கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு பொதுமக்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். மாசி மகா சிவாரத்திரி வரும் 18ம் தேதி இரவு கொண்டாடப்படுகிறது. மறுநாள் 19ம் தேதி நாள் முழுவதும் திருவிழா களைகட்டும். இதையொட்டி மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் குலதெய்வக் கோயில்களில் பொதுமக்கள் வழிபட தயாராகி வருகின்றனர். ஆண்டிற்கு ஒரு முறையாவது குலதெய்வ வழிபாடு முக்கியம் என்பதால், சிவராத்திரி தினத்தன்று குலதெய்வக் கோயிலுக்கு சென்று வருகின்றனர்.

பொதுவாக குலதெய்வக் கோயில்கள் கிராமங்களில் அமைந்திருக்கும். சிவராத்தியையொட்டி இந்த கோயில்கள் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. கோயில்களை வெள்ளையடித்து காவி நிறம் பூசியும், சாமி பெட்டி எடுப்பது சம்மந்தமான ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. ராக்காயி அம்மன் கோயில் மதுரை மாவட்டத்தில் திருமங்கலம், உசிலம்பட்டி, கள்ளிக்குடி, கருமாத்தூர், செக்கானூரணி, மேலூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள கிராமப்புற கோயில்களில் மகாசிவராத்தியையொட்டி புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. கோயில்களில் சிவராத்திரி தினத்தன்று இரவு முழுவதும் உற்றார் உறவினர்களுடன் தங்குவதற்கான ஏற்பாடுகள், மைக்செட், சீரியல் செட் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் துவங்கியுள்ளன.

பல கிராமங்களில் உற்றார் உறவினர்கள் ஒன்றாக டிராக்டர், லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களை வாடகைக்கு பிடித்து குலதெய்வக் கோயிலுக்கு செல்வது தென்மாவட்டங்களில் வழக்கமாக இன்று வரையில் காணமுடிகிறது. ஒரு சில கிராமகோயில்கள் சாமியாடிகள் சாமியாடியபடியே குறி சொல்வதும் சிவராத்திரி தினத்தன்று வழக்கம். சிவராத்திரியையொட்டி சாமி பெட்டியை உற்றார் உறவினருடன் கோயிலுக்க எடுத்து சென்று குலதெய்வத்திற்கும் சாமிபெட்டிக்கும் சிறப்பு அலங்காரம் செய்வர். பின்னர் விடிவிடிய சிறப்பு பூஜைகள் நடைபெறும். அப்போது ஏராளமானோர் பொங்கல் வைத்து உற்றார் உறவினர்களுடன் குலதெய்வத்தினை வழிபாடு நடத்துவது வழக்கம்.

குலதெய்வம் வழிபாடு உற்றார் உறவினர் அனைவரும் இணைந்து சாமி கும்மிட்டால் நன்மை பயக்கும் என்பதால் தென்மாவட்ட மக்கள் சிவராத்திரிக்கு முக்கியத்துவம் தருகின்றனர். சிவராத்திரிக்கு முந்திய நாள் முதல் மறுநாள் மதியம் வரை தொடர்ந்து அன்னதானம் நடைபெறும். சிவராத்திரி நிறைவடைந்த பின்பு மீண்டும் சாமிபெட்டியை ஊர்வலமாக பூசாரி எடுத்து வந்து, சாமிவீடு வைத்து செல்வார். இந்தாண்டு நாளை மறுநாள் பிப்.18ம் தேதி மகா சிவராத்திரி வருவதால் தென்மாவட்டங்களில் சிவராத்திரி கொண்டாட்டத்திற்கு வழக்கம் போல் பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.

திருமங்கலம், கள்ளிக்குடி, மதுரை தேனி, உசிலம்பட்டி உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த பலரும் மதுரை அழகர்கோயிலில் உள்ள ராக்காயி அம்மன் கோயிலில் சென்று தீர்த்தம் ஆடி, காப்புகட்டி விரதம் மேற்கொள்வர். சில பக்தர்கள் தங்களது குலதெய்வக் கோயில்களிலேயே காப்பு கட்டிகொள்வதும் உண்டு. மேலும், பக்தர்கள் பலரும் தங்களது நேர்த்திக்கடனை தீர்க்க மணி, விளக்கு உள்ளிட்டவைகளை வாங்கி குலதெய்வக் கோயிலில் செலுத்துவது வழக்கமான ஒன்றாகும். தென்மாவட்டங்களில் பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமானோர் சிவராத்தியையொட்டி குலதெய்வத்திற்கு காப்பு கட்டி வழிபாட்டிற்கு தயாராகி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.