தருமபுரி: தருமபுரியில் பாமக கவுரவத் தலைவர் இல்லத் திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றது, ஈரோடு இடைத்தேர்தலில் பாமக-வின் வாக்குகளை ஈர்ப்பதற்கான திட்டம் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாமக கவுரவத் தலைவரும், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதி எம்எல்ஏ -வுமான ஜி.கே.மணி இல்லத் திருமண விழா(அவரது சகோதரர் ஜி.கே.முத்து-வின் மகள் திருமண விழா) இன்று(16-ம் தேதி) தருமபுரியில் பென்னாகரம் சாலையையொட்டி அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. முன்னதாக நேற்று(15-ம் தேதி) மாலை முதல் இரவு வரை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. பாமக-வின் தற்போதைய கவுரவத் தலைவரான ஜி.கே.மணி நீண்ட காலம் பாமக தலைவராக இருந்தவர். அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், அதிகாரிகள் என பலருடன் நெருக்கமான நட்பு கொண்டவர்.
அவரது இல்லத் திருமண வரவேற்பு விழா மற்றும் திருமண விழா நிகழ்ச்சிகளில் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். நேற்று மாலை தமிழக விளையாட்டு மற்றும் இளையோர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவருடன் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோரும் திருமண வரவேற்பில் பங்கேற்றனர். அதன்பின், சேலத்தில், ‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டத்துக்காக முதலமைச்சர் முகாமிட்டிருந்த நிலையில் உதயநிதி சேலம் புறப்பட்டுச் சென்றார்.
இதற்கிடையில், நேற்று சேலத்தில் ஆய்வு நிகழ்ச்சிகளை முடித்திருந்த முதல்வர் ஸ்டாலின், இரவு திடீரென புறப்பட்டு தருமபுரி வந்து ஜி.கே.மணி இல்லத் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களுக்கு மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்தி விட்டு, இரவு 10.30 மணியளவில் சேலம் திரும்பினார். ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக அணியில் காங்கிரஸ் வேட்பாளரும், அதிமுக மற்றும் தேமுதிக கட்சி வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
பாமக, சமக ஆகிய கட்சிகள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடாது என்று அக்கட்சியின் தலைவர்கள் அன்புமணி ராமதாஸ், சரத்குமார் ஆகியோர் கடந்த இரு வாரங்களுக்கு முன்பே அறிவித்து விட்டனர். இந்நிலையில், ஆய்வுப் பணிக்காக சேலத்தில் முகாமிட்டிருந்த முதல்வர், முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென ஜி.கே.மணி இல்லத் திருமண விழாவில் பங்கேற்று திரும்பியதன் பின்னணியில் அரசியல் கணக்கீடுகள் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘‘திமுக, அதிமுக தரப்புகள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்ததேர்தலில் வெற்றிக் கனியை பறிக்க தீவிரமாக களத்தில் உள்ளன. இந்த சூழலில் பிரதான கட்சிகளைப் பொறுத்தவரை ஒவ்வொரு வாக்குமே முக்கியத்துவம் வாய்ந்தவைதான். இந்த தொகுதியில் பாமக-வுக்கும் குறிப்பிடும்படியான வாக்கு வங்கி உள்ளது.
‘இடைத்தேர்தலில் போட்டியில்லை’ என பாமக அறிவித்துவிட்ட நிலையில், ஈரோடு கிழக்கில் உள்ள அக்கட்சி வாக்காளர்களை தங்கள் பக்கம் ஈர்த்து விட வேண்டும் என்பதற்காகவே முதல்வர் ஸ்டாலின் முன்னறிவிப்பு இல்லாமல் ஜி.கே.மணி இல்லத் திருமண விழாவில் பங்கேற்று சென்றுள்ளார். ஈரோடு கிழக்கில் உள்ள பாமக வாக்காளர்கள், ஊடகங்கள் மூலம் இந்த திருமண விழா குறித்து அறியும்போது, தேர்தல் நாளில் அவர்களின் விரல் கையை வருட சாத்தியம் ஏற்படலாம் என்பது திமுக தரப்பின் அரசியல் கணக்கீடாக தெரிகிறது’’ என்றனர்.