மதுரையில், மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு, அதனை எடுத்துச்சென்ற ஆம்புலன்ஸ்கள் தடையின்றி செல்ல கிரீன் காரிடர் எனப்படும் பச்சை விளக்கு சிக்னல் போடப்பட்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் கோயம்புத்தூர் மற்றும் புதுக்கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த செல்வம், வாகன விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயமடைந்து, மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார்.
இந்நிலையில், செல்வத்தின் மனைவி மற்றும் குடும்பத்தினர் ஒப்புதலுடன் அவரது உடலுறுப்புகள் தானமாக அளிக்க முடிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து இன்று காலை 10.20 மணிக்கு இதயத்தை எடுத்துக் கொண்டு கோயம்புத்தூருக்கு புறப்பட்ட ஆம்புலன்ஸ் பகல் 1.20 மணிக்கும், 10.45 மணிக்கு கல்லீரலை எடுத்துக் கொண்டு புதுக்கோட்டைக்கு புறப்பட்ட ஆம்புலன்ஸ் பகல் 12.30 மணிக்கும் குறிப்பிட்ட இடங்களை சென்றடைந்தது.
இதயம் கோயம்புத்தூரில் உள்ள சந்திரமோகன் என்பவருக்கும், கல்லீரல் புதுக்கோட்டையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மகாராஷ்டிராவை சேர்ந்த பாபுராவு நகாடிக்கும் பொருத்தப்படுகிறது.