துபாய் :அமெரிக்க அரசால், ௮௨ கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்ட பயங்கரவாதி சயீப் அல் அதீல், ௬௨, ‘அல் குவைதா’ அமைப்பின் புதிய தலைவராக செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல நாடுகளிலும் செயல்பட்டு வரும் அல் குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவராக இருந்த அய்மான் அல் ஜவாஹிரி, கடந்தாண்டு ஆக.,ல் அமெரிக்கப் படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டார்.
அதைத் தொடர்ந்து இந்த அமைப்பின் தலைவர் யார் என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், பல பயங்கரவாத சம்பவங்களில் தொடர்புடைய சயீப் அல் அதீல், அல் குவைதா அமைப்பின் அறிவிக்கப்படாத தலைவராக செயல்பட்டு வருவதாக ஐ.நா., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேற்காசிய நாடான எகிப்து ராணுவத்தில் சிறப்பு அதிரடிப் படை அதிகாரியாக பணியாற்றிய சயீப் அல் அதீல், ௧௯௯௧ல் அல் குவைதா அமைப்பில் இணைந்தார்.
வெடிகுண்டுகள் தயாரிப்பதில் நிபுணரான இவர், அல் குவைதா அமைப்பின் பல்வேறு பயங்கரவாத செயல்களுக்கு மூளையாக செயல்பட்டுள்ளார்.
இவர் குறித்து தகவல் அளிப்போருக்கு, ௮௨ கோடி ரூபாய் பரிசை அமெரிக்கா ஏற்கனவே அறிவித்து உள்ளது.
தற்போது இவர் ஈரானில் இருப்பதாகவும், பொதுவாக இவர் குறித்த தகவல்கள் வெளியுலகுக்கு தெரியாது என்றும் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement