நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி படம் நாளை வெளியாகிறது. அதேபோல செல்வராகவன் நடிப்பில் உருவாகியுள்ள பகாசூரன் படமும் நாளை வெளியாகிறது. செல்வராகவன் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர். பிரம்மாணடமாக செலவு செய்து படம் எடுக்காமல், பிரம்மாண்ட கதையை நம்பி மட்டுமே படம் எடுப்பதில் கில்லாடி.
காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை என செல்வராகவன் எடுத்த பல படங்களும் 90’ஸ் கிட்ஸ்களையும் தாண்டி 2 கே கிட்ஸ்களுக்கும் பேவரைட். அழுத்தமான கதை, நடிகர்கள் தேர்வு என இவரை மிஞ்சிக்கொள்ள முடியாது. இப்படிப்பட்ட இயக்குநர் நடிகரானால் சொல்லவா வேண்டும்.
கொரோனா சமயத்தில் நடிகை கீர்த்தி சுரேஷுடன் சேர்ந்து இவர் நடித்திருந்த சாணிக் காகிதம் படம் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது. இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
இயக்குநராக எப்படி இவர் பெஸ்ட்டாக இருப்பாரோ அதேபோல நடிகராகவும் பெஸ்டாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதோடு விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் படத்திலும் முக்கியமான ரோலை ஏற்று நடித்திருப்பார். விஜய்யை விட அந்த படத்தில் இவரை தான் பலரும் பாராட்டி இருந்தார்கள்.
இதன் தொடர்ச்சியாக இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் பகாசூரன் படத்தில் நாயகனாக நடித்துள்ளார் செல்வராகவன். அந்தப்படம் நாளை வெளியாகிறது. எப்போதுமே சர்ச்சை கதைகளுக்கு பெயர் போன மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடித்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.
அதேபோல வாத்தி படத்துக்கும் எக்கச்சக்க எதிர்பார்ப்பு உள்ளது. தனுஷ் நடித்துள்ள இந்த படம் நேரடி தெலுங்கு படமாக உருவாகியுள்ளது. தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள வாத்தியில் சம்யுக்தா நாயகியாக நடித்துள்ளார். நடிப்பு அசுரன் தனுஷ் நடித்துள்ள வாத்தி படமும், அவரது குருவும் அண்ணனுமான செல்வராகவன் நடித்துள்ள பகாசூரன் படமும் ஒரே நாளில் வெளியாவது கூடுதல் ஸ்பெஷல்.
இந்த ரேசில் அண்ணன் ஜெயிப்பாரா அல்லது தம்பி ஜெயிப்பாரா என்பது நாளை தெரிந்துவிடும். தனது வாத்தியிடம் தனுஷ் மோதுவதால் நாளை ஸ்பெஷல் நாள் தான். அண்ணன், தம்பி நடித்த படங்கள் ஒரே நாளில் வெளியாவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.