இந்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் கடன் பிரச்னையால் நஷ்டத்தால் இயங்கிவந்த நிலையில் அதனை டாடா குழுமம் அக்டோபர் 2021-ம் ஆண்டு வாங்கியது. இந்நிலையில் டாடா குழுமத்தைச் சேர்ந்த ஏர் இந்தியா நிறுவனம் பிரான்சின் விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 250 விமானங்களையும், அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் நிறுவனத்திடமிருந்து 220 விமானங்களையும் வாங்க முடிவு செய்து கையொப்பமிட்டுள்ளது.
மொத்தம் 470 விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை ஏர் இந்தியா நிறுவனம் மேற்கொண்ட நிலையில் அதுதொடர்பாக டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் பேசியுள்ளார்.

“உலகத்தரத்திலான கட்டமைப்பை இந்தியாவில் உருவாக்கி வருகிறோம். 470 விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் வாங்கியது ஒரு சாதனை நிகழ்வாகக் கருதப்படுகிறது. வியக்கத்தக்க வகையில் நிறுவனம் விரிவுபடுத்தப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியா நிறுவனம் தனது சேவையைச் சீரமைக்க முடிவு செய்து நவீன இருக்கைகள் மற்றும் சிறந்த பொழுதுபோக்கு அமைப்புகளை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியாவை அரசாங்கத்திடம் இருந்து கையகப்படுத்தியதிலிருந்து, டாடா குழுமம் விமான நிறுவனத்தைப் புதுப்பிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.