அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்கள் 2 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் எலத்தகிரியில் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் வரலாறு ஆசிரியராக பணிபுரிந்து வரும் 59 வயதான ராஜா என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அதே பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணிபுரியும் நடேசன் என்பவரும் மாணவிகளுக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இருவரும் தலைமறைவாக உள்ளதால் அவர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் 2 பேரையும் தற்காலிக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.