அரியலூர் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தார். மேலும் லிப்ட் கேட்டுச்சென்ற பெண் படுகாயமடைந்தார்.
அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி ஆண்டரசன் தெரு பகுதியை சேர்ந்தவர் விவசாயி ராஜா(52). இவர் வி. கைகாட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் சுத்தமல்லி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இவருடன் லிப்ட் கேட்டு தீயனூர் பகுதியை சேர்ந்த தமிழரசி(20) என்பவர் சென்றுள்ளார். இந்நிலையில் நரியங்குழி பேருந்து நிலையம் அருகே சென்றபோது, காரைக்காலில் இருந்து அரியலூர் நோக்கி வந்து கொண்டிருந்த லாரி ஒன்று இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் தமிழரசி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் லாரி ஓட்டுநரான கடலூர் மாவட்டத்தை சேர்ந்த முருகேசன் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.