திருமலை: அரசு மருத்துவமனையில் பிறந்து 15 நாளே ஆன பச்சிளம் குழந்தை இறந்துவிட்டது. ஆம்புலன்ஸ் ஏற்பாடு தாமதமானதால் பெற்றோர் சடலத்தை ஸ்கூட்டியில் எடுத்துச்சென்றனர்.
ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜு மாவட்டம், குமடா என்ற மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர் கொண்டபாபு (30). இவரது மனைவி மகேஸ்வரி (25). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மகேஸ்வரி பிரசவத்திற்கு விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கடந்த 20 நாட்களுக்கு முன் பஸ்சில் அழைத்து வரப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு கொண்டபாபு தனது ஊருக்கு சென்று ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு வந்து மனைவியை கவனித்து வந்தார். அங்கு 15 தினங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது.
ஆனால் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று இறந்து விட்டது. இதனால் குழந்தையின் சடலத்தை எடுத்துச் செல்ல மருத்துவமனையில் ஆம்புலன்சை கேட்டனர். ஆனால் ஊழியர்கள் சரிவர பதிலளிக்கவில்லையாம். இதனால் 120 கி.மீ தொலைவில் உள்ள தங்களது ஊருக்கு குழந்தையின் சடலத்தை ஸ்கூட்டியில் எடுத்துக்கொண்டு தம்பதியினர் புறப்பட்டனர். இதையறிந்த படேரு மருத்துவமனை ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாகப்பட்டினம் மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், ஆம்புல்ன்ஸ் ஏற்பாடு செய்வதற்குள் அவர்கள் தங்களது ஸ்கூட்டியில் சென்று விட்டதாக தெரிவித்துள்ளது.
மேலும் அம்மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணா கூறுமையில், ‘பிறந்து 15 நாட்களே ஆன நிலையில் குழந்தை இறந்த சம்பவத்தை பதிவு செய்ய வேண்டி இருந்தது. இதை முடித்துவிட்டு வாகனம் தயார் செய்வதாக கூறினோம். அதன்படி பணியை 15 நிமிடத்தில் முடித்துவிட்டு வாகனத்தை ஏற்பாடு செய்வதற்குள் குழந்தையின் உடலை எடுத்துக்கொண்டு ஸ்கூட்டியில் சென்று விட்டனர். இரண்டு முறை போன் செய்தபோது நாங்கள் ஸ்கூட்டியில் கிளம்பிவிட்டோம் என்றனர். இதனால் படேருவில் பேசி வாகனத்தை ஏற்பாடு செய்தோம்’ என்றார்.